டேட்டா சென்டர் மையமாகும் புறநகர் பகுதிகள் அம்பத்துாரில் 400 கி.வோ., துணைமின் நிலையம்
சென்னை :சென்னை புறநகரில் தனியார் நிறுவனங்கள், 'டேட்டா சென்டர்' எனப்படும் தரவு மையங்களை அமைத்து வருகின்றன. இவற்றுக்கு, சீராக மின் வினியோகம் செய்வதற்கு அம்பத்துாரில், 400 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையம் அமைக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது. சென்னை அம்பத்துாரில், சி.டி.ஆர்.எல்.எஸ்., நிறுவனமும், செங்கல்பட்டு சிறுசேரி, 'சிப்காட்' தொழில் பூங்காவில், 'சிபி டெக்னாலஜிஸ்' நிறுவனமும், ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய டேட்டா சென்டர்களை அமைத்துள்ளன. அவற்றுக்கு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவை வாடிக்கையாளராக உள்ளன. டேட்டா சென்டர்களில், அதிக மின் பயன்பாடு உள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், டேட்டா சென்டர் நிறுவனங்கள் தொழில் துவங்க, சென்னை மாதவரத்தில், 150 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப நகரரை, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அமைக்க உள்ளது. இதனால், சென்னை புறநகர் டேட்டா சென்டர் தொழில்களுக்கான மையமாக உருவெடுத்துள்ளது. அவற்றுக்கு மின் வினியோகம் செய்ய, அம்பத்துாரில், 400 கிலோ வோல்ட் திறனில் துணைமின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.Advertisementhttps://www.youtube.com/embed/DZexVr2-VC4இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் கோயம்பேட்டில், 400 கி.வோ., துணைமின் நிலையம் அமைக்கப்பட இருந்தது. அம்பத்துார், மாதவரம், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் தகவல் தொழில்நுட்ப குறிப்பாக, டேட்டா சென்டர் மையம் அமைக்க, பல தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. எனவே, டேட்டா சென்டர்களுக்கு தனி வழித்தடத்தில் சீராக மின் வினியோகம் செய்ய, கோயம்பேட்டில் அமைக்க திட்டமிட்டிருந்த, 400 கி.வோ., துணைமின் நிலையத்தை, அம்பத்துாரில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ***