எஸ்.ஆர்.எம்.,மில் செஸ் போட்டி 446 வீரர்கள் பங்கேற்று உற்சாகம்
சென்னை :எஸ்.ஆர்.எம்., பல்கலை ஆதரவில், கோல்டன் கேநைட் செஸ் அகாடமி, மாஸ்டர் மைண்ட் செஸ் அகாடமி இணைந்து, சர்வதேச பிடே ரேட்டிங் செஸ் போட்டியை, காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலையில் நேற்று துவக்கின.ஓபன் முறையில் நடக்கும் இப்போட்டியில், எட்டு மாநிலங்கள் மற்றும் 226 சர்வதேச மாஸ்டர்கள் உட்பட மொத்தம், 446 வீரர், வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர்.காலையில் துவங்கிய முதல் நாள் போட்டியில், பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டாளர் குணசேகரன், விளையாட்டுத்துறை இயக்குனர் மோகனகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.நேற்று மதியம் வரை நடந்த முதல் சுற்று முடிவில், தமிழகத்தின் விஜய் ஸ்ரீராம், சைலேஷ், அஜ்ஜேஷ், ரதர்போர்ட், கனிஷ்கராஜ், பிரவீன், ஹரி கணேஷ், ராமநாதன், சிவன் ரோஷன், விக்னேஷ் ஆகியோர் வெற்றி பெற்று, தலா ஒரு புள்ளிகள் பெற்றனர். போட்டியில் மொத்த பரிசு தொகையாக, ஐந்து லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டு உள்ளது. 18ம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன.