சென்னை, தைப்பூசம், குடியரசு தின விழா ஆகிய இரு நாட்கள் 'டாஸ்மாக்' கடைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது, மதுரவாயல் கண்ணன் நகரில் உள்ள ரகுநாதன் என்பவர், மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனையில் ஈடுபட்டுள்ளார்.மதுரவாயல் போலீசார், நேற்று முன்தினம் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தினர். இதில் 4,550 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இதற்கு உடந்தையாக இருந்த கூட்டாளிகளான, சிவகங்கையைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, 45, ராமநாதபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், 25, ஹரீஷ், 18, கோல்கட்டாவைச் சேர்ந்த ஆலிம்ஷா, 36, ஆகியோரையும் கைது செய்தனர். ராயபுரம், மீனாட்சிஅம்மன் பேட்டையில் வெளிநாட்டு மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக, ராயபுரம் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 150 வெளிநாட்டு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.மது பாட்டில்கள் பதுக்கிய, முகமது பாயாஸ் கான், 27, என்பவரை கைது செய்தனர். அதேபோல், வியாசர்பாடி, சுந்தரம் பவர் லைனில் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் பதுக்கி, அதிக விலைக்கு விற்பதாக வியாசர்பாடி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த, 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.