சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கிய 51 பேருக்கு அபராதம்
சென்னை: பைக், கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்திய 51 பேருக்கு, தலா 12,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில், உரிய அனுமதியில்லாமல் பைக் டாக்ஸி இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இது தொடர்பாக, தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், போக்குவரத்துத் துறை கமிஷனரகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இயங்கிய பைக் டாக்ஸிகள், வணிக உரிமம் இல்லாமல் வாடகைக்கு இயக்கப்படும் பைக் மற்றும் கார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 38 பைக்குகள், 13 கார்கள் என மொத்தம், 51 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, தலா 12,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்கள் தொடர்ந்தால், உரிமம் ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, போக்குவரத்து கமிஷனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.