உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 5,395 தகைவிலான் குருவிகள் முகாம்

5,395 தகைவிலான் குருவிகள் முகாம்

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போது, 5,395 தகைவிலான் எனப்படும் மழைக்குருவிகள் முகாமிட்டுள்ளதாக, பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.சென்னையில், பள்ளிக் கரணை சதுப்பு நிலத்திற்கு ஆண்டுதோறும், செப்., முதல் ஏப்., வரை இங்கு, வலசை பறவைகள் வந்து செல்கின்றன. இதில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரிய வகை பறவைகளின் வருகை பதிவு செய்யப் படுகிறது. அந்த வகையில் தற்போது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தகைவிலான் எனப்படும் மழைக்குருவிகள் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது.இது குறித்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது: பள்ளிக் கரணையில், வனத்துறையுடன் இணைந்து, 15 ஆண்டு களாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். ஆண்டுதோறும் இங்கு, தகைவிலான் பறவைகள் வருவது வழக்கம். ஆப்ரிகா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வலசை வரும் இப்பறவைகள், சிறிய பூச்சிகளை உணவாக உன்னும்.பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், 2014ம் ஆண்டு, ஜன., 4,375, பிப்., 7,472 என தகைவிலான் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது. இதே போன்று, 'பாம்பே நேச்சுரல் ஹிஸ்டிரி சொசைட்டி' எனப்படும் பி.என்.எச்.எஸ்., அமைப்பின் கணக்கெடுப்பில், 2014, ஜன., 5,000; பிப்., 4,000 என, இதன் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டது. செப்., மாதத்தில், முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது, 5,395 தகைவிலான் பறவைகள் வந்துள்ளன. இதற்கான காரணங்கள் என்ன என்று ஆராய்ந்து வருகிறோம். பள்ளிக்கரணை மட்டுமல்லாது கேளம்பாக்கம் பகுதியிலும் அவை அதிகம் காணப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.மழை அதிகரிக்குமா? பொதுவாக, மழை அதிகரிக்க வாய்ப்புள்ள இடங்களில் தகைவிலான் அதிகமாக காணப்படும் என்பதால் இதற்கு மழைக்குருவி என்ற பெயர் உள்ளது. இந்த அடிப்படையில், தமிழகத்தில் இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை அதிகரிக்கும் என்பதை, தகைவிலான் வருகை சுட்டிக்காட்டுகிறதா என்ற கருத்து நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ