மாதவரம், படவட்டம்மன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில், டிரெய்லர் லாரி டிரைவராக வேலை செய்பவர், துாத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த லட்சுமண பெருமாள். கடந்த, 13ம் தேதி மாலை, மணலியில் உள்ள, 'சன்மித்ரா' நிறுவனத்தில் இருந்து, 25,000 கிலோ இரும்பு பொருட்களை, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஏற்றிச் சென்றார். சென்னை மாதவரம் பால்பண்ணை அடுத்த 200 அடி சாலை, மாத்துார் சுங்கச்சாவடி அருகே, லாரியை நிறுத்தி ஓய்வெடுத்துள்ளார். அப்போது அவரை சரமாரியாக தாக்கி, சாலையோர பள்ளத்தில் தள்ளிய மர்ம கும்பல், லாரியை திருடிச் சென்றனர். லாரி டிரைவர் புகாரின்படி, மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரித்தனர். லாரியின் ஜி.பி.எஸ்., கருவி வாயிலாக, ஆவடி அடுத்த மோரை கிராமத்தில் இருப்பதைக் கண்டறிந்தனர். அங்கு சென்று லாரியை மீட்டனர். மீட்கப்பட்ட இரும்புப் பொருட்கள் மற்றும் லாரியின் மதிப்பு, 45 லட்சம்.லாரியை திருடிய கும்பலைச் சேர்ந்த, பழைய இரும்பு வியாபாரிகளான மாதவரம் செந்தில்வேல், 43, பெரியமாத்துார் முருகானந்தம், 40, வானகரம் சிவகுமார் பாண்டியன், 41, பெரியதோப்பு தினேஷ், 42, முருகன், 40, மணிகண்டன், 33, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். தலைமறைவான ஆவடி உதயகுமார், செங்குன்றம் பழனி ஆகியோரை தேடி வருகின்றனர்.