ரூ.2 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை பாசக்கார பெற்றோர் உட்பட 6 பேர் கைது
கண்ணகிநகர்: பெண் குழந்தையை, 2.20 லட்சம் ரூபாய்க்கு விற்ற பெற்றோர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். கண்ணகி நகர், எழில் நகரை சேர்ந்தவர் ஸ்ரீஜோ, 26; ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி வினிஷா, 23. இவர்களுக்கு, ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த மே மாதம் நான்காவது பெண் குழந்தை பிறந்தது. தம்பதி, இந்த குழந்தையை வளர்க்க முடியாமல், விற்க முடிவு செய்தனர். வினிஷா, அவரது தாய் சரளா, வினிஷாவின் தோழி சிவரஞ்சனி, சிவரஞ்சனியின் மாமியார் சகாய மேரி, அவரது தோழி சுமதி என பலரும் கூட்டு சேர்ந்து குழந்தையை விற்க முயன்றனர். திருவண்ணாமலையில், 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாத ஒரு தம்பதியிடம் பேசி, 2.20 லட்சம் ரூபாய்க்கு விற்றனர். குழந்தை விற்பனை ஜூலை மாதம் நடந்தது. குழந்தையை வாங்கிய தம்பதி தாய்ப்பால் கொடுப்பதற்காக, குழந்தையை கண்ணகி நகரில் உள்ள தாயிடம், வாரம் ஒருமுறை கொண்டு வந்தனர். அப்போது, குழந்தையை விற்ற தகவல், குழந்தைகள் நல அலுவலருக்கு தெரிந்தது. அவரது புகாரையடுத்து, கண்ணகி நகர் போலீசார், குழந்தையின் பெற்றோர், வாங்கிய தம்பதி மற்றும் குழந்தையை விற்க உதவிய, எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில், ஸ்ரீஜோ, 26, வினிஷா, 34, சிவரஞ்சனி, 22, சகாயமேரி, 39, சரளா, 45, சுமதி, 35, ஆகிய ஆறு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர். பெண் குழந்தை மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.