ரயிலில் அபாய சங்கிலியை இழுத்த 96 பேருக்கு அபராதம்
சென்னை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, 50க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், புறநகர் பகுதிகளுக்கு, 600க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. ரயில் நிலையத்துக்குள் தேவையின்றி சுற்றித்திரிவோர் முதல் பயணியருக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் ஆட்டோவை நிறுத்துவது வரை, பல்வேறு வகையான ரயில்வே விதிமீறல்களுக்கு, ரயில்வே போலீசார் அபராதம் விதிக்கின்றனர். அதன்படி, மருத்துவ தேவை உட்பட அவசர நேரத்தில், ரயிலில் உள்ள அபாய சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்த அனுமதி உள்ளது. ஆனால், வழியனுப்ப வருவோர் ரயில் கிளம்பியதும் இறங்குவதற்காகவும், தாமதமாக வருவோர் ரயிலில் ஏறவும், அபாயச் சங்கிலியை இழுப்பது அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அவசியமின்றி அபாயச் சங்கிலியை பிடித்து இழுப்போருக்கு, 1,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது. அதன்படி, சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குட்பட்ட பகுதியில், ரயில்களில் அவசியமின்றி அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததாக, கடந்த 2023ம் ஆண்டு 210 பேர் மீதும், கடந்தாண்டு 217ம் மீதும் வழக்கு பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில், 96 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவு ஆய்வாளர் மதுசூதனரெட்டி தெரிவித்தார். மேலும், இது தொடர்பான விதிமீறல்கள் விரைவு ரயிலில் அதிகரித்துள்ளதாகவும், புறநகர் ரயில்களில் மாணவர்கள் விதிமீறலில் ஈடுபடுவது குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.