எண்ணுார்:மூதாட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.சென்னை, எண்ணுார், அன்னை சிவகாமி நகரில் சாலையோரம் வசித்த ஆதரவற்ற மூதாட்டி பொன்னி, 83. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மக்கள், உணவு வழங்கி உதவி வந்துள்ளனர்.கடந்த 25ம் தேதி, மூதாட்டி திடீரென உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த எண்ணுார் போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.இதனிடையே, சம்பவ இடத்தில் இருந்த, 'சிசிடிவி கேமரா' காட்சி பதிவு ஆதாரங்கள் போலீசாரிடம் சிக்கின. அந்த பதிவில், 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், மூதாட்டியை தரதரனெ இழுத்துச் சென்று வீசுவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.மேலும், நேற்று வெளியான மூதாட்டியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதால், உயிரிழப்பு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, எண்ணுார் தனிப்படை போலீசார், 'சிசிடிவி கேமரா' பதிவில் சிக்கிய சிறுவனின் உருவத்தை வைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.நேற்று மதியம், எர்ணாவூர், சுனாமி குடியிருப்பில் சுற்றித் திரிந்த சிறுவனை பிடித்து விசாரித்த போது, மூதாட்டியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதை ஒப்புக் கொண்டான்.இதையடுத்து போலீசார், சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.