சாலையில் தேங்கிய மழைநீரில் அறுந்து விழுந்த மின் கம்பி; கொத்தனார் பலி
ஈஞ்சம்பாக்கம், சாலையில் தேங்கிய மழைநீரில் அறுந்து விழுந்த மின் கம்பியால், மின்சாரம் பாய்ந்து கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார். இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கம், முனீஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த சாமுவேல், 57; கொத்தனார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன்; பழ வியாபாரி. பிள்ளையார் கோவில் தெருவில் சாலையோரம் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 9:30 மணிக்கு, அய்யப்பன் தன் வீட்டில் இருந்த இரண்டு பழக்கூடைகளை கடைக்கு கொண்டு வரும்படி, சாமுவேலிடம் கூறியுள்ளார். பழக்கூடையுடன் சாமுவேல் கடைக்கு செல்லும்போது, பிள்ளையார் கோவில் தெருவில் தேங்கி கிடந்த தண்ணீரில் மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காத சாமுவேல், தண்ணீரில் கால் வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து சுருண்டு விழுந்துள்ளார். அங்கிருந்தோர் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் விபரீதங்கள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். தகவல் அறிந்து வந்த மின் வாரிய ஊழியர்கள், மின் இணைப்பை துண்டித்து, அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர். மழைநீர் தேக்கம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை, இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக, பிரதான சாலைகளில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில், முழங்கால் அளவிற்கு, சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால், காலை 'பீக் ஹவர்' வேளைகளில் பள்ளி, கல்லுாரி மற்றும் பணிகளுக்கு சென்றோர் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.