அறிவிப்பு பலகை இல்லாததால் வடிகால் பள்ளத்தில் சிக்கிய கார்
ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம், ஜீவன் நகர் பிரதான சாலை, இரண்டாவது, மூன்றாவது தெரு சந்திப்பு பகுதிகளில், மழைநீர் வடிகால் பணி நடந்து வருகிறது.அதற்காக, சாலையின் குறுக்கே, 30 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது.இரண்டு நாட்களாக, இரவில் பெய்து வரும் மழையால், அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கியது.பள்ளம் இருப்பது குறித்து, மாநகராட்சி சார்பில் எந்த அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்படவில்லை.இதனால், நேற்று முன்தினம் நள்ளிரவு, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் விஜய் என்பவரின் கார், மேற்கண்ட பள்ளத்தில் சிக்கியது.ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த விஜயும், முன் இருக்கையில் இருந்த அவரது தோழியும், பள்ளம் பெரிய அளவில் இருந்ததால் விபத்தில் சிக்க நேரிடும் என பயந்து, கீழே இறங்காமல் காரிலே தவித்தனர்.அக்கம் பக்கத்தினர் வந்து, காரில் இருந்து அவர்களை பத்திரமாக மீட்டனர். நீண்ட நேரம் போராடியும் காரை வெளியே எடுக்க முடியவில்லை. இதையடுத்து, மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, சிறிது நேர போராட்டத்திற்கு பின் கார் மீட்கப்பட்டது.வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், மாநகராட்சி, குடிநீர் வாரியத்தின் சார்பில் பள்ளம் தோண்டும், தோண்டப்பட்ட பகுதிகளில், எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.