மறைமலை நகர் போலீசாரை தாக்கி மாடு திருடிய கும்பல் அட்டூழியம்
மறைமலை நகர்: மாடுகளை திருடிச்சென்ற மர்ம கும்பலை, ரோந்து பணியில் இருந்த போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை தாக்கி மற்றவர்கள் தப்பிய நிலையில் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மறைமலை நகர், அண்ணா சாலையில் இருந்து ஜி.எஸ்.டி., சாலை நோக்கி, நேற்று அதிகாலை 2:45 மணிக்கு வந்த 'பொலீரோ' சரக்கு வாகனத்தை, ரோந்து பணியில் இருந்த மறைமலை நகர் போலீசார் நிறுத்த முயன்றனர். சரக்கு வாகனம் நிற்காமல் சென்றதால், போலீசார் விடாமல் துரத்தியபோது, சரக்கு வாகனத்தை ஓட்டிய நபர், சாலையில் சென்ற ஒரு கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். போலீசாரிடம் சிக்காமல் இருக்க, சரக்கு வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உட்பட ஆறு பேர் தப்பிச் சென்றனர். இது குறித்து, இரவு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வாகனத்தில் இருந்த ஆறு மாடுகள் மீட்கப்பட்டன. இதில் ஒரு பசு பலத்த காயமடைந்து இருந்தது. விசாரணைக்கு பின், மறைமலை நகர் அடுத்த ரயில் நகர் பகுதியை சேர்ந்த உரிமையாளர்களிடம், மாடுகள் ஒப்படைக்கப்பட்டன. இதற்கிடையே, மறைமலை நகர் - ஆப்பூர் சாலையில் ரோந்து பணியில் இருந்த மறைமலை நகர் குற்றப் பிரிவு போலீஸ்காரர்கள் விக்னேஷ் மற்றும் பிரபு இருவரும், அந்த வழியாக 'ஸ்பிளண்டர்' பைக்கில் வந்த மூவரை மடக்க முயன்றனர். அவர்கள் நிற்காமல் சென்றதால், 6 கி.மீ., துரத்தி சென்ற போலீசார், ஆப்பூர் டேங்க் பகுதியில் அவர்களை முந்திச் சென்று சாலை நடுவே தங்கள் பைக்கை குறுக்கே நிறுத்தினர். மர்ம நபர்கள், போலீசாரின் பைக் மீது தங்களின் பைக்கை மோதினர். இதில், போலீஸ்காரர்கள் இருவருக்கும் காலில் அடிபட்டது. எனினும், மூவரில் ஒருவரை பிடித்தபோது, மற்ற இருவர் இரும்பு ராடால் போலீசாரை தாக்க முயன்றனர். பொதுமக்கள் ஓடி வந்ததால், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பிடிபட்ட நபர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த காமர் அலி, 30, என்பது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இவர், தன் கூட்டாளிகளுடன் இணைந்து மறைமலை நகர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், சுங்குவார்சத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த மூன்று ஆண்டுகளாக, சாலையில் திரியும் ஆயிரக்கணக்கான மாடுகளை திருடி கன்டெய்னர் மற்றும் சரக்கு வாகனங்களில் இறைச்சிக்காக கடத்தி சென்றது தெரிந்தது. தப்பிச் சென்ற மற்ற ஐந்து பேரையும், போலீசார் தேடி வருகின்றனர். தப்பிச்செல்ல பைக் ' ஆட்டை ' மாடுகள் கடத்திய சரக்கு வாகனம் விபத்தில் சிக்கிய பின், ஆறு பேரும் தப்பிச் சென்றனர். அப்போது, மறைமலை நகர் ரயில் நிலையம் அருகில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 'ஸ்பிளண்டர்' பைக்கை திருடி, அதில் ஆப்பூர் சாலை வழியாக மூவர் தப்பிச் சென்றனர். அவர்களில் ஒருவரை போலீசார் பிடித்தனர்.