உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாயு பாதிப்பை முழுதாக அறிய குழு அமைப்பு கலெக்டர் உறுதி

வாயு பாதிப்பை முழுதாக அறிய குழு அமைப்பு கலெக்டர் உறுதி

திருவொற்றியூர் அமோனியா வாயு கசிவுக்கு காரணமான, கோரமண்டல் நிறுவனத்தை நிரந்தரமாக மூட கோரி, எண்ணுார் மக்கள் பாதுகாப்பு குழுவினர், எட்டாவது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர்.இதில், வி.சி.க., தலைவர் திருமாவளவன் பங்கேற்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவித்தார். பின், வரும் 9ம் தேதி, எண்ணுாரில் போராட்டம் நடத்துவதாக அறிவித்தார்.இந்நிலையில், பாதிக்கப்பட்ட கிராமங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற, கருத்து கேட்பு கூட்டம், எண்ணுார், மீன்வளத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது.சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில், வடசென்னை எம்.பி., கலாநிதி, எம்.எல்.ஏ.,க்கள் சங்கர், சுதர்சனம், மண்டல குழு தலைவர்கள், மாசு கட்டுபாட்டு வாரியம், மீன்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.பொதுமக்கள் பேசியதாவது:வெங்கடேசன், எண்ணுார்: அமோனியா வாயு கசிவை, விபத்தாக நிறுவனம் எங்கும் பதிவு செய்யவில்லை. 2007ல் விரிவாக்கத்தின் போது, கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவில்லை. மீன்கள் இறப்பை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை.மாசு கட்டுப்பாட்டு கருவிகள் ஏதுமில்லை. பேரிடரின்போது, அமோனியா தொட்டி பாதிக்காது என, உத்தரவாதம் தர வேண்டும்.பகத்சிங், உலகநாதபுரம், எண்ணுார்: ஏற்பட்ட பாதிப்புக்கு, எம்.எல்.ஏ., காவல்துறையே சாட்சி. விபத்திற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை. எண்ணெய் பாதிப்பிற்கு தலைமை செயலர் வந்தார். அமோனியா கசிவிற்கு யாரும் வரவில்லை. இக்கூட்டத்தில் பெண்கள் பங்கேற்கவில்லை. அவர்களின் வலியை கேட்டு பாருங்கள்.தொழிற்சாலை மீது வழக்கு பதிய வேண்டும். எல்.இ.டி., திரைகளில் காற்றின் தரத்தை தெளிவுப்படுத்த வேண்டும். நிறுவனத்திற்கு, 'நோட்டீஸ்' ஒட்டவில்லை. ஆனால், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.ரியாஸ், வியாபாரி சங்க நிர்வாகி, எண்ணுார்: உயிர் பயத்தில் இருக்கிறோம். 100 ஆண்டுகள் தாங்கும் என்ற குழாய், 30 ஆண்டில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாழ வழியில்லை என, ரேஷன் கார்டுகளை திருப்பி தந்து விடுகிறோம். உயிர் பிச்சை கேட்கிறோம். இன்னொரு போபால் பார்க்க வேண்டும் என்றால், நிறுவனம் தொடர அனுமதியுங்கள்.தமிழ்செல்வன், சத்தியவாணி முத்து நகர், எண்ணுார்: தொடர் பாதிப்பால், அம்மா, அப்பா, குழந்தையை இழந்துவிட்டேன். மருத்துவர்கள் பரிசோதனை செய்தால், எங்கள் நிலை உங்களுக்கு புரியும். தொடர்ச்சியாக அமோனியா கசிவு உள்ளது. வருங்கால சந்ததியை காப்பாற்ற, நிறுவனத்தை மூட வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.நிறைவேற்ற வேண்டும்சென்னை முழுதும், 6 காற்று தர அளவீடு கருவிகள் இருப்பதாக, அதிகாரி கூறினார். எண்ணுாரில் மட்டும், நான்கு தேவைப்படுகிறது. பிரச்னை உள்ள இடங்களில், காற்றின் தரம் அறியும் அளவீடு கருவிகள் பொருத்த வேண்டும். இது, கப்பலில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முன் பராமரிப்பு பணியில் போது, ஏற்பட்ட கசிவு மட்டுமே. எண்ணுாரில் ஆய்வுகள் எடுத்து, குழு அறிக்கை தயார் செய்ய வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும்.-கலாநிதி, வடசென்னை எம்.பி.,நிரந்தர முடிவு எட்டப்படும்அரசு, மக்களுக்காக தான் உள்ளது. பாதிப்பு குறித்து அறிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை சார்ந்த வல்லுனர்களும் அதில் இடம் பெற்றுள்ளனர். ஆய்வறிக்கை வெளிவந்த பின், நடவடிக்கை இருக்கும். அரசு, இந்த விவகாரத்தில் நிரந்தர முடிவை எட்டும்.-ரஷ்மி சித்தார்த் ஜகடே,கலெக்டர், சென்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ