அரும்பாக்கம், அரும்பாக்கம் பகுதியில் தேங்கிய மழைநீரில், மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய வாலிபரின் சேவை, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அரும்பாக்கம், உத்தாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட், 35; தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் செடன் ராயன், 9. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.கடந்த 16ம் தேதி மாலை, பள்ளி முடிந்து அதே பகுதியில் உள்ள மங்கள் நகர், ஒன்றாவது தெரு வழியாக, சிறுவன் நடந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.சாலையில் மழைநீர் தேங்கி இருந்ததால், நீரில் கால் வைத்து விளையாடியபடி செல்லும்போது, அப்பகுதியில் உள்ள மின் இணைப்பு பெட்டி அருகே மின்சாரம் பாய்ந்து, திடீரென கீழே சுருண்டு விழுந்து துடிதுடித்துள்ளார்.அந்நேரம், பைக்கில் வந்த அரும்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன், 23, என்பவர், வாகனத்தை நிறுத்தி ஹெல்மெட்டை கழட்டி கீழே போட்டுவிட்டு, சிறுவன் அருகில் சென்றார்.உயிருக்கு போராடிய சிறுவனை, கண்ணன் துரிதமாக செயல்பட்டு லாவகமாக மீட்டார். இந்த சம்பவத்தின் 'சிசிடிவி' வீடியோ காட்சிகள், நேற்று காலை வெளியாகி அதிர்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.சிறுவன் செடன் ராயன் கையில் லேசான காயங்களுடன் நலமுடன் இருக்கிறார்.கண்ணன் மட்டும் அந்த நேரத்தில் வரவில்லையெனில், என் மகனை உயிரோடு பார்த்திருக்க முடியாது; கடவுள் போல் வந்து காப்பாற்றினார். இதுபோன்ற விபரீதங்கள் நடக்காதவாறு, அரசு செயல்பட வேண்டும்.- ராபர்ட்,சிறுவனின் தந்தை.
என் உயிர் பெரிதாக தெரியவில்லை
இது குறித்து, சிறுவனை காப்பாற்றிய கண்ணன், 23, கூறியதாவது:தனியார் நிறுவனத்தின் கலெக் ஷன் துறையில் பணிபுரிகிறேன். கடந்த 16ம் தேதி பணி நிமித்தமாக அப்பகுதிக்கு சென்றிருந்தேன்.அப்போது, மழைநீர் தேங்கிய பள்ளத்தில் சிறுவன் ஒருவன் விழுந்து கிடந்தான். தவறி விழுந்ததாக நினைத்து மீட்க சென்றேன். அவனுடைய கை கால் எல்லாம் துடிதுடிக்கவே, மின்சாரம் தாக்கியதை உணர்ந்தேன். அருகில் சென்று, இரண்டு முறை கையை தொட்டபோது, எனக்கும் மின்சாரம் தாக்கியது. மீண்டும் ஒருமுறை நம்பிக்கையுடன் கையை பிடித்து, சிறுவனை இழுத்தேன். சிறுவனைப் பார்த்தபோது, என் உயிர் பெரிதாக தெரியவில்லை.உடனடியாக ஓரமாக சென்று முதலுதவி செய்து தண்ணீர் கொடுத்தோம். பின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.அரும்பாக்கம் பகுதியில் எப்போதுமே தண்ணீர் தேங்குவது வழக்கம். அதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
யார் இந்த கண்ணன்?
புதுக்கோட்டை மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 23. திருமணமாகாத இவர், டிப்ளமா படித்துவிட்டு, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கில், 'பாலாஜி என்டர்பிரைசஸ்' நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜன்டாக பணிபுரிகிறார்.