உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விமரிசை

முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விமரிசை

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா, கடந்த 14ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் ஆடிப்பரணியும், நேற்று ஆடி கிருத்திகை விழா மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழாவும் நடந்தது. ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து திருத்தணி முருகன் கோவிலுக்கு, இரண்டு லட்சம் பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே வந்தனர். தங்கள் நேர்த்திக்கடனை காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நிறைவேற்றினர். ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா, திருத்தணி முருகனுக்கு நேற்று காவடி எடுத்து வந்தார். ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, குடும்பத்துடன் வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்தார். நேற்று மாலை 6:30 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் முருகப்பெருமான், மலைப்படிகள் வழியாக சரவணபொய்கைக்கு வந்து, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறுவாபுரி பொன்னேரி அடுத்த சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆயிரகணக்கான பக்தர்கள் முருக பெருமானை இரண்டு மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்குடம் எடுத்து வந்தனர். ஏராளமானோர் காவடி எடுத்து வந்தனர். இதேபோல், வடபழனி முருகன், திருப்போரூர் கந்தசுவாமி உள்ளிட்ட முருகன் கோவில்களிலும் ஆடி கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை