போலீஸ் எனக்கூறி எம்.பி.ஏ., மாணவரிடம் ரூ.99,000 மோசடி
கொண்டித்தோப்பு, கொண்டித்தோப்பு, பெருமாள் முதலி தெருவை சேர்ந்தவர் சாய் சரண், 22; தனியார் பல்கலையில் எம்.பி.ஏ., படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவருக்கு மும்பை போலீஸ் பேசுவதாக கூறி, ஒரு மொபைல் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், 'நீ போதை பொருள் கடத்தல், சட்ட விரோத பண பரிவர்த்தனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது.உன் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம்' என்று கூறியுள்ளார். 'நான் அப்படி எதுவும் ஈடுபடவில்லை' என்று சாய்சரண் கூறியுள்ளார். அதற்கு மர்ம நபர், 'உன் வங்கி கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும்.நான் அனுப்பும், யு.பி.ஐ., - ஐ.டி., வழியாக, 99,000 ரூபாய் அனுப்பவும். வங்கி கணக்குகளை சரிபார்த்த பின், பணத்தை திருப்பி அனுப்பி விடுகிறோம்' என்று கூறியுள்ளார்.இதை உண்மையென நம்பிய சாய் சரண், மர்ம நபர் கூறிய யு.பி.ஐ., - ஐ.டி.,க்கு, அவரது வங்கி கணக்கில் இருந்து, 99,000 ரூபாயை ஆன்லைன் வழியே அனுப்பி உள்ளார். பின் நடந்ததை வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தபோது, அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாய் சரண், போலீஸ் உதவியை நாடியுள்ளார். இதுகுறித்து, பூக்கடை சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.