கல்லுாரி மாணவர்கள் ரூட் தல விவகாரம் 5 ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு
சென்னை, கல்லுாரி மாணவர்களுக்கு இடையே மோதலை தடுக்க, சென்னை சென்ட்ரல் உட்பட ஐந்து ரயில் நிலையங்களில், கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில், காலை மற்றும் மாலையில் அலுவலக நேரங்களில் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிலர், மின்சார ரயில்களின் படியில் தொங்கியபடியும், ரயிலின் ஜன்னல் பகுதியில் நின்று கொண்டும், சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில நேரங்களில் ரயில் நிலையங்களிலும் கற்களால் வீசி, தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. தற்போது, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களிடையே மோதல் போக்கை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பிரதான ரயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இது குறித்து, ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:கல்லுாரி மாணவர்களிடையே மோதல் கூடாது என, பலமுறை வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மாணவர்கள் சிலர் அறிவுரையை ஏற்காமல், வன்முறையில் ஈடுபடுகின்றனர். இதனால், சென்ட்ரலில் வழக்கத்தை விட, கூடுதல் போலீசார் நியமனம் செய்து கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர, பெரம்பூர், வியாசர்பாடி, பட்டரவாக்கம், இந்து கல்லுாரி ஆகிய ரயில் நிலையங்களிலும், தலா நான்கு போலீசார் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நெறிமுறை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
பஸ்சில் ரகளையில் ஈடுபட்ட
15 மாணவர்கள் மீது வழக்குசெங்குன்றத்தில் இருந்து காரனோடை நோக்கி நேற்று முன்தினம் காலை தடம் எண் '57எச்' பேருந்து சென்றது. வியாசர்பாடி மேம்பாலம் வழியாக செல்லும்போது, அதில் பயணித்த கல்லுாரி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் கூரை ஏறி, ரகளையில் ஈடுபட்டனர். அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். ஆனால், மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்க மறுத்து, தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டனர்.நீண்ட நேரத்துக்கு பின், மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கியதும் மீண்டும் பேருந்து புறப்பட்டு சென்றது. இச்சம்பவத்தால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயணியர் கடும் அவதியடைந்தனர்.இது குறித்து, வியாசர்பாடி போலீசாரின் விசாரணையில் பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.இது தொடர்பாக, 15 மாணவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து, அவர்களை தேடி வருகின்றனர்.