உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் மருத்துவர் கிடையாது மண்டல குழுவில் அ.தி.மு.க., குற்றச்சாட்டு

நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் மருத்துவர் கிடையாது மண்டல குழுவில் அ.தி.மு.க., குற்றச்சாட்டு

திருவொற்றியூர், ''நகர்ப்புற நலவாழ்வு மையங்களில், மருத்துவர் இல்லாமல் பரிந்துரைக்கப்படும் மருந்துகளால் நோயாளிகளுக்கு மேலும் பாதிப்பு ஏற்படலாம்,” என, அ.தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் குற்றம்சாட்டினார். திருவொற்றியூர் மண்டல குழு கூட்டத்தில், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு, உதவி கமிஷனர் விஜயபாபு, செயற்பொறியாளர் பாண்டியன், பாபு உட்பட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், ஏழு கோடி ரூபாய் மதிப்பிலான, 68 பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேறிய தீர்மானம், அடிப்படை வசதிகள் குறித்து, கவுன்சிலர்கள் பேசினர்.அ.தி.மு.க., 7வது வார்டு, கார்த்திக்: பள்ளம் மேடாக உள்ள கே.சி.பி., சாலையை சீரமைக்க வேண்டும். நகர்புற நலவாழ்வு மையத்தில் மருத்துவர் கிடையாது. மருத்துவர் இல்லாமல் பரிந்துரைக்கப்படும் மருந்தால், பாதிப்பு ஏற்படலாம்.தெருவிளக்கு அமைக்கும் பணி கடந்தாண்டு அக்டோபரில் துவங்கியும், ராமசாமி நகர் உட்பட பல இடங்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது.மண்டல குழு தலைவர் பூமி பூஜை போட்டால்தான், வேலை வேகமாக நடக்கிறது. வீடு கட்டுபவர்களிடம், விதிகளை மீறி அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து வீடியோ பதிவுகளை அனுப்புகிறேன்; உதவிகமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்கில் நகர் பேருந்து நிலையத்திற்கு, நிதி ஒதுக்கி நான்கு மாதங்களாகியும் இன்னும் பணிகள் நடக்கவில்லை. மூன்று மணி நேரத்தில், 14 பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, எதிர்ப்பு தெரிவித்ததும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடுவேன்; அனைவரும் பதில் சொல்லியாக வேண்டும். கவுன்சிலரை அழைக்காமல், பூஜை போடுவது சரியில்லை. மா.கம்யூ., 4வது வார்டு, ஜெயராமன் : ஜோதி நகர் உட்பட ஐந்து இடங்களில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். ராமநாதபுரம், 2, 6, 8 தெருக்களில் பலவீனமாக உள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும். திடீரென சரிந்து விழுந்தால் பிரச்னையாகி விடும். விடுப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.தி.மு.க, 3வது வார்டு, தமிழரசன்: ஐந்து ஊர்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு இல்லை. அதிகாரிகள் சுலபமாக ஏதாவது பதில் சொல்லி விடுகிறீர்கள்; மக்களிடம் நாங்கள்தான் பதில் சொல்ல வேண்டியுள்ளது.ஊருக்குள் போடப்பட்ட சாலைகளில் வேகத்தடை இல்லாததால், வேகமாக வரும் பைக்குகளால் விபத்து ஏற்படுகிறது. புதிய ரெடிமேட் வேகத்தடைகளை, 14 தெருக்களுக்கும் அமைக்க வேண்டும். மின்பெட்டி ஒயர்கள்வெளியே ன் இருப்பதால், விபத்து அபாயம் உள்ளது. தி.மு.க., 8வது வார்டு, ராஜகுமாரி: ஒற்றவாடைதெரு, ரெட்டை மலை சீனிவாசன் நகர் போன்ற பல பகுதிகளில், கால்வாய்களில் அடைப்பு உள்ளது. தெருவிளக்கு கம்பங்கள் சாயும் நிலையில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூறியும் இதுவரை மாற்றப்படவில்லை. மழைக்கு முன் மாற்ற வேண்டும்.தி.மு.க., மண்டல குழு தலைவர், தனியரசு: கவுன்சிலர் மீதே நடவடிக்கை எடுக்கும் ஆட்சி இது. வீடு கட்டுபவர்களிடம் விதிகளை மீறி அபராதம் வசூலிப்பதாக அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றஞ்சாட்டி உள்ளார். உரிய ஆதாரம் சமர்ப்பித்தால், அதிகாரிகள் மீது நடவடிக்கை இருக்கும். பூங்கா, நிழற்குடை திறக்கும்போது, மண்டல குழு தலைவருக்கு அழைப்பில்லை. நிழற்குடையில் முதல்வர் படமில்லை. கல்வெட்டில் மண்டல குழு தலைவர் பெயர் கிடையாது.மண்டல உதவி கமிஷனர், விஜயபாபு: அதிகாரிகள் உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். கவுன்சிலர்களை கலந்தாலோசிக்க வேண்டும். சாலை வெட்டப்படும்போது, குடிநீர், மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பணி துவங்கிய 234 சாலைகளில், 130ல் பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள 104 சாலைகள் ஆகஸ்டிற்குள் முடிக்கப்படும். விடுப்பட்ட தெருக்களில் சாலை அமைப்பது குறித்து, கவுன்சிலர் மேற்பார்வையில், உயர் அதிகாரி கவனத்திற்கு, உதவி பொறியாளர்கள் கொண்டு வர வேண்டும். மின்வாரிய ஒயர்களை நாங்கள் தொந்தரவு செய்வதில்லை. சாலை போடும்போது, மின்வாரிய பிரதிநிதி இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ