கொசு வலையுடன் சென்ற அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளியேற்றம் தாம்பரம் மாநகராட்சியில் முறைகேடு நடப்பதாக புகார்
தாம்பரம், : தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில், கொசு வலை போர்த்தியவாறு சென்று, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நுாதன போராட்டம் நடத்தினர். கொசு, நாய் தொல்லையை தீர்ப்பதாக கூறி, மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். ஆளுங்கட்சியுடன் மோதல் ஏற்பட்ட நிலையில், அ.தி.மு.க., - த.மா.கா., கவுன்சிலர்கள் வெளியேற்றப்பட்டனர். தாம்பரம் மாநகராட்சி கூட்டம், மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று நடந்தது. இதில், துணை மேயர் காமராஜ், கமிஷனர் பாலச்சந்தர், அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியதும், அ.தி.மு.க., - த.மா.கா., கவுன்சிலர்கள், கொசு வலை போர்த்திக்கொண்டு, கையில், நாய், மாடு, பன்றி பொம்மைகளுடன் பங்கேற்றனர். மாதந்தோறும் கொசு, நாய், பன்றி தொல்லையை கட்டுப்படுத்துவதாக கூறி, மாநகராட்சியில் கொள்ளை நடப்பதாக, அவர்கள் குற்றம் சாட்டினர். அப்போது, அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்தவர்கள், வளாகத்தில் கொசு வலை போர்த்தியும், கையில் நாய், பன்றி, மாடு பொம்மைகளுடன் தரையில் அமர்ந்தும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர். வரிப்பணம் கொள்ளை இதுகுறித்து, மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சங்கர் கூறியதாவது: மாதந்தோறும் கொசு, நாய், பன்றி தொல்லையை கட்டுப்படுத்த ஒதுக்கப்படும் நிதியை, அதிகாரிகள் துணையோடு, ஆளும் கட்சியினர் விஞ்ஞான முறையில் கொள்ளை அடிக்கின்றனர். இதுபற்றி கேள்வி கேட்கும் கவுன்சிலர்களிடம், ஆளும் கட்சி கவுன்சிலர்கள் மோதலில் ஈடுபட்டனர். வலுக்கட்டாயமாக அரங்கை விட்டு வெளியேற்றி, மக்கள் விரோத செயலில் ஈடுபடுகின்றனர். மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்போருக்கு, விரைவில் மக்களே பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். வழக்கமாக மாநகராட்சி கூட்ட அரங்கிற்குள் நிருபர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், மன்றத்தில் நடக்கும் விவாதங்களை அவர்கள் கேட்க வசதியாக ஒலி பெருக்கி வசதி செய்யப்பட்டு உள்ளது. நிகழ்வுகளை கண்ணாடி வழியாக பார்க்க முடியும். நேற்று அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் மோதலில் ஈடுபட்ட நிலையில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அந்த விபரங்கள் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக, செய்தியாளர் அறைக்கான ஒலிபெருக்கி இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், கூட்ட நிகழ்வுகளை கண்ணாடி வழியாக பார்த்தாலும், மோதலின்போது பேசிக் கொண்டது என்ன என்று தெரியாமல், அந்த காலத்தில் ஊமை படம் பார்ப்பது போல், நிருபர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.