ஏர்போர்ட் திட்ட டெண்டர்; மத்திய அரசிடம் அனுமதி கேட்பு
சென்னை: சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 5,320 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. திட்ட செலவு, 29,150 கோடி ரூபாய். பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு இட அனுமதி மற்றும் கொள்கை அளவிலான ஒப்புதலை, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வழங்கிவிட்டது. தற்போது, விமான நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட உள்ளது. இதற்கான ஆவணங்களை தயாரித்து, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறும் பணியில், தொழில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சட் டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. இதனால், டெண்டர் ஆவணங்களுக்கு அனுமதி பெற்று விட்டாலும், சட்டசபை தேர்தல் முடிந்த பின்பே, பரந்துார் விமான நிலைய திட்ட கட்டுமான பணிக்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோர, அரசு முடிவு செய்துள்ளது.