மூத்த குடிமக்களுக்கு புத்துணர்ச்சி மையம் தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில், மூத்த குடிமக்களுக்கான புத்துணர்ச்சி மையம் உள்ளிட்ட ஐந்து புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தாம்பரம் மாநகராட்சி கூட்டம், மேயர் வசந்தகுமாரி தலைமையில், நேற்று நடந்தது. இதில், துணை மேயர் காமராஜ், கமிஷனர் பாலச்சந்தர் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியதும், ஐந்து புதிய அறிவிப்புகளை மேயர் வசந்தகுமாரி வெளியிட்டார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், 275 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: ஜோசப் அண்ணாதுரை, தி.மு.க., 2வது மண்டல குழு தலைவர்: மண்டலங்களில் கூட்டம் நடத்தி நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு, மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்காததால், ஒவ்வொரு மண்டலத்திலும் ஏகப்பட்ட பணிகள் நிலுவையில் உள்ளன. அதனால், மண்டல கூட்டங்கள் நடத்த முடியவில்லை. கவுன்சிலர்களுக்கு பதில் கூற முடியவில்லை. 2வது மண்டலத்தில், 5 மாதங்களாக கூட்டமே நடத்தவில்லை. புஸிராபானு, ம.தி.மு.க., 26வது வார்டு: குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலை - ராதா நகரை இணைக்கும் வகையில் கட்டப்படும் சுரங்கப்பாதைக்கு, ஏற்கனவே திட்டமிட்டபடி காயிதே மில்லத் பெயர் சூட்ட வேண்டும். செந்தில்குமார், காங்கிரஸ், 25வது வார்டு: மூன்றாவது மண்டலத்தில், மண்டல குழு தலைவர் இல்லை. அதோடு, கூட்டமும் நடத்துவதில்லை. அதனால், தங்களது வார்டில் உள்ள பிரச்னைகள் குறித்து, யாரிடம் புகார் தெரிவிப்பது என்பது தெரியவில்லை. சாய்கணேஷ், அ.தி.மு.க., 47வது வார்டு: அய்யப்பன் தெரு, கந்தசாமி காலனியில், சமீபத்தில் போடப்பட்ட சிமென்ட் சாலை, சரியாக போடப்படவில்லை. ஆண்டாள் தெருவில், பணி ஆணை கொடுத்தும், ஒரு வருடமாக பூங்கா சீரமைப்பு பணி துவங்கவில்லை. தாமோதரன், தி.மு.க., 45வது வார்டு: தாம்பரம் - வேளச்சேரி சாலை, கேம்ப் ரோடு சந்திப்பில், கடைகளின் மேற்பகுதியில் ராட்சத பேனர்கள் வரிசையாக உள்ளன. அந்த பேனர்களுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா என தெரியவில்லை. பாலச்சந்தர், கமிஷனர்: மாநகராட்சிகளில், வருவாய் ஈட்டுவதில், தாம்பரம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இம்மாநகராட்சிக்கு, உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் என, 60 பேர் நியமிக்கப்பட உள்ளனர். முதல் கட்டமாக, 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மண்டல வாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை பொறுத்தவரை, தாம்பரம் மாநகராட்சியில் தான் அதிகப்படியான மனுக்கள் வந்துள்ளன. தாம்பரம் - வேளச்சேரி சாலையில், அனுமதி பெறாத பேனர்கள் அகற்றப்படும். ஐந்து மண்டலங்களுக்கும் கால்வாய்களை துார்வார வசதியாக, 'ஜெட்ராடிங்' இயந்திரம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்
5 புதிய அறிவிப்புகள்
தாம்பரம் மாநகராட்சியில், கல்வி மற்றும் சுகாதார பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதன் அடிப்படையில், நேற்று நடந்த கூட்டத்தில், ஐந்து புதிய அறிவிப்புகளை, மேயர் வசந்தகுமாரி வெளியிட்டார். * மூத்த குடிமக்களுக்கு, உடற்பயிற்சி, மனவள கலை மற்றும் இதர ஆலோசனைகளை வழங்க, ஒரு கோடி ரூபாய் செலவில், 'மூத்த குடிமக்களுக்கான புத்துணர்ச்சி மையம்' கட்டப்படும். * மாணவ - மாணவியரின் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்த, 50 லட்சம் ரூபாய் செலவில், 5 இடங்களில், 'பிக்கல் பால்' மற்றும் 5 இடங்களில், 'டென்னிஸ் கோர்ட்' அமைக்கப்படும். * அரசு சேவைகளை ஒரே இடத்தில் பெறும் வகையில், இ - சேவை, ஆதார் மையம், முதல்வர் காப்பீட்டு திட்ட மையம், வரி வசூல் மையம், மின் கட்டண கவுன்டர் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 25 லட்சம் ரூபாய் செலவில், 'ஒருங்கிணைந்த அரசு சேவை மையம்' அமைக்கப்படும். * மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் காயமடைந்த, நோயால் பாதிக்கப்பட்ட நாய்களை தனிமைப்படுத்த, 25 லட்சம் ரூபாய் செலவில், 'நாய்களை தனிமைப்படுத்தும் மையம்' கட்டப்படும். * மாநகராட்சி மக்களுக்கு, அனைத்து அடிப்படை வசதிகளும் உடனுக்குடன் கிடைக்கும் வகையிலும், வளர்ச்சி திட்டங்கள், கட்டமைப்பு வசதிகளை எளிதில் பெறும் வகையிலும், 50 லட்சம் ரூபாய் செலவில், 'ஆக்டிவ் தாம்பரம் ஆப்' உருவாக்கப்படும்.
எந்த வேலையும் நடக்கல
தாம்பரம் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில், 14 கவுன்சிலர்கள் உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதியை மீறி செயல்பட்டதாக, 3வது மண்டல குழு தலைவரும், 40வது வார்டு கவுன்சிலருமான ஜெயபிரதீப்பின் பதவி, கடந்த மார்ச் மாதம் பறிக்கப்பட்டது. அதன்பின், பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படாததால், அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இங்குள்ள அதிகாரிகள், கவுன்சிலர்கள் கூறும் பணிகளை செய்வதில்லை. அதேபோல், அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடம் ஆலோசிக்காமல், இஷ்டத்திற்கு வேலை வைக்கின்றனர். இதனால், மக்களிடம் பதில் கூற முடியவில்லை என, மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.