உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அமெரிக்கவாழ் தம்பதியின் ரூ.4.37 கோடி திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

அமெரிக்கவாழ் தம்பதியின் ரூ.4.37 கோடி திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

சென்னை,அமெரிக்க வாழ் மூத்த தம்பதியின் 4.37 கோடி ரூபாய் திருடிய வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.அண்ணா நகரைச் சேர்ந்தவர் விஜய் ஜானகிராமன், 72. இவரது மனைவி மல்லிகா, 68. இருவரும், அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.இவர்கள், அண்ணாநகரில் உள்ள வங்கி ஒன்றில், 4.37 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு தொகை வைத்துள்ளனர். இந்த கணக்கை கையாள, தி.நகரைச் சேர்ந்த ரவி என்பவருக்கு உரிமை அளித்து உள்ளனர்.மேலும் வீட்டு வரி செலுத்துதல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக, தங்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துக்கொள்ள ரவியிடம், காசோலைகளையும் வழங்கி உள்ளனர்.அந்த காசோலையை, நம்பிக்கையின் அடிப்படையில் வங்கியின் மேலாளராக இருந்த மஞ்சுளா என்பவரிடம் ரவி கொடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் நிரந்தர வைப்பு தொகைக்கான காலம் முடிந்துவிட்டதால், மொத்த பணத்தையும் எடுக்க ரவி வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது, 4.37 கோடி ரூபாயும், முன்கூட்டியே எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் ரவி புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், விஜய் ஜானகிராமன்,மல்லிகா ஆகியோர் தங்களின் நிரந்தர வைப்பு தொகையை முன் கூட்டியே எடுத்தது போல, மஞ்சுளா போலியாக கையெழுத்திட்டு பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.தொடர்ந்து மஞ்சுளாவுடன் மோசடியில் ஈடுபட்ட அவரது நண்பர்களான நாகேஸ்வரன், 52, ஆறுமுககுமார், 63, ஆகிய இருவரை, 7ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், நேற்று அடையாறு பகுதியைச் சேர்ந்த மஞ்சுளாவின் தோழியான சியாமளா, 50, என்பவரை, நேற்று கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான மஞ்சுளாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ