சென்னை சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலத்திற்கும், தலா ஐந்து என, மாடு பிடிக்கும் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்படுகின்றனர். 'அம்மா' உணவக பணியாளர்களுக்கு தினக்கூலி 25 ரூபாய் உயர்த்தப்பட்டு, 325 ரூபாயாக வழங்கப்பட உள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும், சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியின் மாதந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில், 85 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.அதில் சில முக்கிய தீர்மானங்கள்: சென்னை மாநகராட்சியில், ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் தலா ஐந்து மாடு பிடிக்கும் பணியாளர்கள் ஏற்கனவே உள்ளனர்.அதேபோல், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, அம்பத்துார், வளசரவாக்கம், ஆலந்தார், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய மண்டலங்களிலும் தலா ஐந்து உறுப்பினர்கள் புதிதாக பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.இந்த பணியாளர்களுக்கு தினமும் 687 ரூபாய் என, மாதம், 20,610 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் 'அம்மா' உணவகத்தில் பணியாற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, தினக்கூலி 300 ரூபாயில் இருந்து, 325 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் நலன் கருதி, தேவைக்கு ஏற்ப தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க அனுமதிக்கப்படுகிறது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மனை பரப்பளவு 2,500 சதுர அடி மிகாமலும், கட்டட பரப்பளவு 3,500 சதுர அடி மிகாமலும் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு, கட்டட நிறைவு சான்றிதழ் இல்லாமல், சுய சான்றிதழ் அடிப்படையில், தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய கட்டடங்களுக்கு, ஒற்றை சாளர முறையில் கட்டட அனுமதி வழங்கப்படும்.இதற்கான அரசாணை வெளியிட்ட பின், மாநகராட்சியில் நடைமுறைப்படுத்தப்படும். கிறிஸ்தவ கல்லறைகளில் தற்போதுள்ள விதிகளை தளர்த்தி, சவப்பெட்டி இல்லாமல் புதைகப்பட்ட இடத்தில், 12 மாதங்களுக்கு பின், வேறு ஒருவரின் சடலத்தை புதைக்க அனுமதிக்கப்படும். உலோகத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டி புதைக்கப்பட்ட இடத்தில், ஏழு ஆண்டுக்களுக்கு பின், அதே குடும்பத்தை சேர்ந்த வேறு ஒருவரின் சடலத்தை புதைக்க அனுமதிக்கப்படும் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு திட்டங்கள் துறை வாயிலாக, தேனாம்பேட்டை மண்டலம் மத்திய பகிங்ஹாம் கால்வாய் ஒட்டியுள்ள சாலையோர பகுதியில், ஆறு இடங்களில் புதிதாக பூங்காக்கள் மற்றும் அழகுப்படுத்துதல் பணி, 4.50 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும் சென்னை மாநகராட்சி சொத்துவரி சீராய்வில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இயக்கம் சான்று பெற்ற தொழிற்சாலை கட்டடங்களுக்கு, தொழிற்சாலை கட்டணத்தின்படி சொத்துவரி வசூலிக்கப்படுகிறது.அதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியத்தால், '3பி' கீழ் வகைப்படுத்தப்படும் கட்டடங்களுக்கும், தொழிற்சாலை கட்டணத்தின்படி சொத்துவரி வசூலிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வடிகால் துார்வார வார்டுக்கு ரூ.5 லட்சம்!சென்னையில் காலநிலை மாற்றம் காரணமாக, அவ்வப்போது மழை பொழிவு அதிகமாக உள்ளது. இதை கருதி, ஆண்டு முழுதும், மழைநீர் வடிகால் துார்வாரும் பணி நடக்கும். இந்தாண்டு, ஜூன் மாதம் முதல் டிச., மாதம் வரை துார்வாரும் பணி நடக்கிறது. இதற்காக முதற்கட்டமாக வார்டுக்கு, 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தாண்டு ஒப்பந்தாரர் வாயிலாக துார்வாரும் பணி மேற்கொண்டாலும், அடுத்தாண்டு முதல், மாநகராட்சி பணியாளர் கள் வாயிலாக துார்வாரப்படும்.- ஆர்.பிரியா, மேயர், சென்னை மாநகராட்சி
சந்துரு அறிக்கை கிழிப்பு!
பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு களைவது குறித்து, நீதிபதி சந்துரு தயாரித்த அறிக்கையின் நகலை, பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்த், கவுன்சில் கூட்டத்தில் கிழித்து வீசி, அந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.இதனால், தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரை கூட்டத்தில் இருந்து வெளியேறும்படி கோஷமிட்டனர். இதை தொடர்ந்து உமா ஆனந்த் வெளியேறினார்.இந்த சம்பவம் குறித்து, கவுன்சிலர் உமா ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தி.மு.க., - காங்., கவுன்சிலர்கள், மேயர் பிரியாவிடம் கோரிக்கை வைத்தனர். சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில், டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதனால், நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணியர், பிக்மி எண் பதிவு செய்ய, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றால், வெகு தொலைவில் உள்ள சுகாதார நிலையங்களில் பதிவு செய்ய அலைக்கழிக்கப்படுகின்றனர் என, வளசரவாக்கம் மண்டலக்குழு தலைவர் ராஜன் குற்றஞ்சாட்டினார்.
தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
தனியார் கால்நடை மருத்துவப்பிரிவு - நாய் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையங்களில் கருத்தடை அறுவை சிகிச்சை கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, பெண் நாய்க்கு 300 ரூபாயில் இருந்து 450 ரூபாய், ஆண் நாய்க்கு 200 ரூபாயில் இருந்து 350 ரூபாயாக உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சென்னையில் தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. எனவே, நாய்கள் பராமரிப்பு மையத்தை, சென்னை புறநகர் பகுதிகளில் மாநகராட்சி அமைக்க வேண்டும் என, கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். தெருநாய்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்தார். நீதிமன்றம் வாயிலாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.