உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏரியில் செத்து மிதந்த மீன்கள் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பு?

ஏரியில் செத்து மிதந்த மீன்கள் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பு?

கொரட்டூர்: கொரட்டூர் ஏரிக்கான உபரிநீர் கால்வாயில் மீன்கள் செத்து மிதந்த நிலையில், ரசாயன கழிவு கலந்துள்ளதா என, அதிகாரிகள் ஆய்வுக்கு நீர் மாதிரி எடுத்து சென்றுள்ளனர். அம்பத்துார் ஏரி உபரி நீர், அம்பத்துார் தொழிற்பேட்டை, பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்லும் உபரி நீர், கால்வாய் வழியாக கொரட்டூர் ஏரிக்கு செல்கிறது. தொழிற்சாலைகளில் இருந்து சட்ட விரோதமாக, உபரி நீர் கால்வாயில் வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவு நீரால், உபரி நீர் கருப்பு நிறத்தில் மாறி, நேற்று மீன்கள் ஆங்காங்கே செத்து மிதந்தன. இந்நிலையில், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமேகலை மற்றும் பணியாளர்கள் நேற்று கொரட்டூர் ஏரிக்கு சென்றனர். ஏரியில் கழிவு நீர் கலக்கும் இடங்களை தவிர்த்து பிற இடங்களில், நீர் மாதிரிகளை எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர் வலியுறுத்தியதை அடுத்து, கழிவு நீர் கலக்கும் பகுதியிலும், நீர் மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர். மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வேண்டுமென்றே கழிவு நீர் கலக்கும் பகுதிகளை தவிர்த்து, கண் துடைப்புக்காக நீர் மாதிரிகள் எடுத்து சென்றதாக, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !