புதிய நியமன அலுவலர்களுக்கு மாநகராட்சியில் பணி ஒதுக்கீடு
சென்னை:மாநகராட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் வரைவாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியில், 113 சுகாதார ஆய்வாளர்கள், 54 உதவி பொறியாளர்கள், 12 வரைவாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களை அழைத்து, அறிமுக கூட்டம் நடத்திய மேயர் பிரியா, சிறப்பாக பணியாற்ற வேண்டும் என, அறிவுரை வழங்கினார். இந்நிலையில், இவர்களுக்கு மாநகராட்சியில் பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டு உள்ளது. உதவி பொறியாளர்களை வார்டுகளுக்கு அனுப்பவில்லை. மாறாக, தலைமை அலுவலகத்தில் உள்ள சிறப்பு திட்டங்களில் பணி வழங்கப்பட்டு உள்ளது. சிறப்பு திட்டம், பாலங்கள், மெக்கானிக்கல், மழைநீர் வடிகால்வாய், நகர திட்டமிடல், கட்டடங்கள், பூங்கா, பேருந்து சாலை, தரக்கட்டுப்பாடு ஆகிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளனர். அங்கு பணி அனுபவம் பெற்ற பின், வார்டுகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். வரைவாளர்கள் அந்தந்த பிரிவுகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். சுகாதார ஆய்வாளர்களை வார்டுகள் மற்றும் மண்டலம் வாரியாக பிறப்பு, இறப்பு பதிவு மையங்கள், 'அம்மா' உணவக பதிவேடு பராமரிப்பு பணிகளுக்காக பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.