அரசு பஸ் ஒட்டுனர் மீது தொடரும் தாக்குதல்கள்
வேப்பேரி, அரசு மாநகரப் பேருந்து ஒப்பந்த ஓட்டுனரை தாக்கிவிட்டு தப்பிய, மூன்று மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருமுல்லைவாயல், ஜெயலட்சுமி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சஜீவ், 34; மாநகரப் பேருந்து ஒப்பந்த ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, 29 - ஏ வழித்தடத்தில், பெரம்பூரில் இருந்து அண்ணாசதுக்கம் நோக்கி, பேருந்தை இயக்கிச் சென்றார். இருசக்கர வாகனத்தில் வந்த மூவருக்கு வழிவிடாமல், ஓட்டுனர் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால், இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் ஆத்திரமடைந்து, புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோவில் நிறுத்தத்தில் நிற்கும்போது, பேருந்தினுள் நுழைந்து, ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை கைகளால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து, வேப்பேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, சற்று தொலைவில்தான் கண்காணிப்பு கேமரா இருந்ததால், தாக்குதலில் ஈடுபட்டவர்களின் வாகன எண்ணை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.