மேலும் செய்திகள்
தகராறில் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு
08-Sep-2025
தாம்பரம்:ஆட்டோவை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஆட்டோ ஓட்டுநரை கடத்திய கும்பல், காலியிடத்தில் வைத்து சரமாரியாக வெட்டி கொன்ற சம்பவம் தாம்பரத்தில் நடந்துள்ளது. ஐந்து பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தாம்பரம் அடுத்த குறிஞ்சி நகர், வி.ஜி.என்., குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு, பலத்த வெட்டு காயங்களுடன் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். தாம்பரம் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை சோதனை செய்ததில், அதில் ரத்தக்கறை படிந்திருந்தது. தொடர் விசாரணையில், கொலை செய்யப்பட்ட வாலிபர், குரோம்பேட்டை, துர்கா நகரை சேர்ந்த வினோத்குமார் என்கிற ஆத்தா வினோத், 28, என்பது தெரிய வந்தது. ஆட்டோ ஓட்டுநரான இவர் மீது, குரோம்பேட்டை, தாம்பரம் காவல் நிலையங்களில் அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பம்மல் நாகல்கேணி பகுதி டாஸ்மாக் கடையில் இருந்து, வினோத்தை ஆட்டோவில் கடத்தி வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல், கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட வினோத், சமீபத்தில் புதியதாக ஆட்டோ வாங்கி, தாம்பரம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ஸ்டாண்டை மையமாக வைத்து ஓட்டி வந்துள்ளார். ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்த வேண்டுமென்றால், சங்கத்திற்கு 'டிபாசிட்' கட்ட வேண்டும்; சங்கம் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்று, நிர்வாகிகள் கூறியதாகவும், அதை வினோத் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறு முன்விரோதமாக மாறி, வினோத் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இரும்புலியூரைச் சேர்ந்த பிரேம்குமார், 26, பெருங்களத்துாரைச் சேர்ந்த ராஜேஷ், 26, உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் ஆட்டோ ஓட்டுநர்கள். என்பது தெரிய வந்தது.
08-Sep-2025