30 ஆண்டுகளாக இடம் தேடும் ஆவடி கிளை நுாலகம் ஆட்சி பல மாறியும் காட்சி மாறவில்லை
ஆவடி, ஆவடி, சின்னம்மன் கோவில், காந்தி சிலை அருகில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், ஆவடி கிளை நுாலகம் இயங்கி வந்தது. பாழடைந்த தனியார் கட்டடத்தில் இயங்கி வந்த அந்த நுாலகத்தில், 2,500 உறுப்பினர்கள், 15,000 புத்தகங்கள் இருந்தன.தினமும் 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் நுாலகத்தை பயன்படுத்தி வந்தனர். மழைக்காலத்தில் நுாலகத்தினுள் மழைநீர் கசிந்து புத்தகங்கள் பாழாகி, வாசகர்கள் உட்கார முடியாமல் அவதி அடைந்தனர்.நுாலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என, வாசகர்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, பருத்திப்பட்டு கிராமம், சர்வே எண்: 162ல், 15 சென்ட் நிலம் ஒதுக்கி, கடந்த 1987ல், ஆவடி நகரியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கலெக்டருக்கு அனுப்பப்பட்டது.மீண்டும் 1993ல், மேற்கூறிய தீர்மானத்தின்படி, நுாலகத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும் என, ஆவடி நகராட்சி நகரியம் நிர்வாக அலுவலர் சார்பில் ஸ்ரீபெரும்புதுார் வட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பட்டது. தொடர் அரசியல் அழுத்தம் காரணமாக, 1995 வரை அந்த தீர்மானம் கிடப்பில் போடப்பட்டது. இடமாற்றம்
இது குறித்து, கடந்த 1992ல் அப்போதைய காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன்படி, 1995ல், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வணிக வளாகத்தின் முதல் தளத்தில் நுாலகம், தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. மேலும், நிரந்தர கட்டடம் அமைக்க உடனடியாக இடம் ஒதுக்கப்படும் என, கலெக்டர் உறுதி அளித்தார். ஆனால், தற்போது வரை அங்கு தான் இயங்கி வருகிறது. இடம் ஆக்கிரமிப்பு
அந்த கட்டடமும் முறையான பராமரிப்பு இல்லாமல், பாழடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. மழைக்காலத்தில், நீர் கசிவு ஏற்பட்டு புத்தகங்கள் பாழாகி வருகின்றன. நுாலகத்தில் பெண் நுாலகர் உட்பட 3 பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கான குடிநீர், கழிப்பறை உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லை.இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக புத்தகங்கள் இரவல் தருவது நிறுத்தி வைக்கப்பட்டு, நாளிதழ்கள் மட்டுமே படிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது வாசகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, நுாலகத்திற்கு ஒதுக்கப்பட்ட 8 சென்ட் இடம் தனியாரால் அக்கிரமிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. ஆய்வு என்னாச்சு?
தொடர் புகாரை அடுத்து, செப்., 30 ம் தேதி, மேற்கூறிய திருவள்ளூர் மாவட்ட கிளை நுாலகத்தில் அமைச்சர் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின், நுாலகத்திற்கு புது கட்டடம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால், நுாலகத்திற்கு விரைவில் விமோசனம் கிடைக்கும் என அனைவரும் நம்பி உள்ளனர். ஆனால், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நுாலகத்திற்கு சொந்த கட்டடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர் தனிப்பிரிவு உட்பட பல அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை 37 ஆண்டுகளாக, 'ஆட்சி பல மாறியும் காட்சி மாறவில்லை' என, சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர். இது குறித்து, நம் நாளிதழில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.கடந்த 37 ஆண்டுகளாக நுாலகத்திற்கு சொந்தம் கேட்டு தொடர்ந்து போராடி வருகிறேன். இன்று வரை தீர்வு கிடைக்கவில்லை. மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உட்பட அரசு தேர்வுக்கான புத்தகங்கள் வைக்க வேண்டும். மழைக்காலம் நெருங்குவதால், நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள இடத்தில் தற்காலிகமாக இடமாற்றம் செய்ய வேண்டும்.- தரணிதரன், 62,சமூக ஆர்வலர், ஆவடி.நுாலக விபரம்மொத்த உறுப்பினர்கள் 6,200மொத்த புத்தகங்கள் 62,000ஊழியர்கள் 3 பேர்பயனாளர்கள் தினமும் 250கடந்த 10 ஆண்டுகளில் வசூலான நுாலக வரித் தொகை 2010 - 2011 ரூ.45 லட்சம்2011 - 2012 ரூ.47 லட்சம்2012 - 2013 ரூ.73 லட்சம்2013 - 2014 ரூ.55 லட்சம்2014 - 2015 ரூ.30 லட்சம்2015 - 2016 ரூ.58 லட்சம்2016 - 2017 ரூ.33 லட்சம்2017 - 2018 ரூ.1.13 கோடி2018 - 2019 ரூ.70 லட்சம்2019 - 2020 ரூ.1 கோடிநுாலகம் அமைப்பதற்கான இடம், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் தான் இலவசமாக இடம் தரவேண்டும். குறைந்தபட்சம் 200 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அலமாரி, மரச்சாமான்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். அதன்பின் தான் நுாலகம் திறக்க வேண்டும். அப்படி பார்த்தால், ஆவடி வீட்டு வசதி வாரியத்தில் செயல்படும் நுாலகத்திற்கு, ஆவடி மாநகராட்சி தான் இடம் ஒதுக்க வேண்டும். இது குறித்து, ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, இது தொடர்பாக நுாலகத்துறையிடம் தான் கேட்க வேண்டும் என்றனர்.- ஓய்வு பெற்ற நுாலகர்.
ரசீது 'மிஸ்ஸிங்'
கடந்த 1993ல், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உருவாக்கப்பட்ட போது, நுாலகத்திற்கு 3,600 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. அதற்கு நுாலகத்துறை சார்பில் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு ஆதாரம் இல்லாததால், இந்த பிரச்னையில் தீர்வு காண முடியாமல் உள்ளது. இதன் காரணமாக, இன்று வரை, மேற்கூறிய இடத்தை நுாலகத்திற்கு ஒதுக்காமல், இன்றைய அரசு நிலமதிப்பின் படி, பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும் என, வீட்டு வசதி வாரியம் கறாராக உள்ளது. ஆண்டுதோறும் 10 சதவீதம் நுாலக வரி வாயிலாக பல லட்சங்களில் வருவாய் ஈட்டும் நுாலகத்துறையும், பணம் கொடுத்து இடம் வாங்க மறுத்து வருகிறது.