ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில் குறும்படம் வெளியீடு
ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில், 'அலர்ட் அய்யா அலர்ட்' என்ற பெயரில் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படம் வெளியிடப்பட்டது.அதில், முதியவர் ஒருவர், வாடகை ஒப்பந்தம் போடாமல் தன் வீட்டை, தம்பதி ஒருவருக்கு வாடகைக்கு கொடுக்கிறார். பின், ஆஸ்திரேலியாவில் உள்ள மகளை பார்க்க குடும்பத்துடன் செல்கிறார். இரண்டு மாதங்களாக வாடகை கொடுத்த அந்த தம்பதி, அதன் பின் சரியாக வாடகை தராமல் ஏமாற்றுகிறது. இதனால் முதியவர், சென்னைக்கு வந்து வீட்டை பார்க்கும் போது, தன் வீட்டில் வேறொரு நபர், குடியிருப்பதை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். விசாரிக்கும் போது, அந்த தம்பதியால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இவ்வாறு குறும்படம் ஓடுகிறது.குறும்படத்தின் முடிவில், கமிஷனர் சங்கர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசுகிறார். அதில், 'உங்கள் வீட்டை வாடகை மற்றும் லீசுக்கு விடும்போது உரிய ஆவணங்களை ஆய்வு செய்து, வழக்கறிஞரிடம் சட்ட ஆலோசனை பெற்று வாடகை ஒப்பந்தம் போட்டு முறையாக வீட்டை வாடகைக்கு விட வேண்டும். அப்போது உங்கள் வீடும், பணமும் பாதுகாப்பாக இருக்கும். விழிப்புடன் இருப்போம் ; செழிப்புடன் வாழ்வோம் என, பேசியுள்ளார்.