ஒலிம்பியாட் மாநில தடகளம் அயப்பாக்கம் பள்ளி சாம்பியன்
சென்னை:அரும்பாக்கம், டி.ஜி., வைஷ்ணவா கல்லுாரி சார்பில், 'ஒலிம்பியாட்' எனும் பெயரில், பள்ளி அளவில் மாநில தடகளப் போட்டிகள், நேரு விளையாட்டு அரங்கில் நடந்தன.இதில், சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமாரி என, பல்வேறு மாவட்டங்களில் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 500 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.போட்டியில், 50 மீ., 100 மீ., 200 மீ., 1,500 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட விளையாட்டுகள் நடத்தப்பட்டன.இருபாலருக்கும் சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளில், அனைத்து போட்டிகளும் நடந்தன.அனைத்து போட்டிகள் முடிவில், மாணவருக்கான சீனியர் பிரிவில், வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி முதலிடத்தை பிடித்து, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரி இரண்டாம் இடத்தை பிடித்தது.அதே பிரிவில், மாணவியரில் அயப்பாக்கம் அரசு மகளிர் பள்ளி முதலிடத்தை பிடித்து, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.இரண்டாம் இடத்தை, எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரி கைப்பற்றியது.அதேபோல், சூப்பர் சீனியர் பிரிவில், மாணவரில் எபினேசர் பள்ளி முதலிடத்தையும், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி இரண்டாமிடத்தையும் வென்றன.மாணவியரில், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரி முதலிடத்தையும், பி.எஸ்., பள்ளி இரண்டாமிடத்தையும் தட்டிச் சென்றன.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, டி.ஜி., வைஷ்ணவா கல்லுாரியின் முதல்வர் சந்தோஷ்பாபு பரிசுகளை வழங்கினர்.