உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சொதப்பல் குடிநீர், இருக்கைகளின்றி பயனாளிகள் சிரமம்

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சொதப்பல் குடிநீர், இருக்கைகளின்றி பயனாளிகள் சிரமம்

பெரும்பாக்கம், முன்னேற்பாடின்றி பெரும்பாக்கத்தில் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், அதிகாரிகளையும், ஊராட்சி நிர்வாகத்தையும் கடிந்து கொண்டார். பரங்கிமலை ஒன்றியத்தில், பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம், இந்திரா நகர், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு ஆகிய மூன்று பகுதிகளில், வெவ்வேறு தேதிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், இதுகுறித்து, பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் முறையாக தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஊராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த முகாமிற்கு, அப்பகுதியினர் மட்டுமின்றி, இந்திரா நகர் மற்றும் வாரிய குடியிருப்புகளைச் சேர்ந்தோரும் அதிகளவில் வந்தனர். இதனால், கூட்டத்தில் இட நெருக்கடி ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டதால், முதியோர் மற்றும் பெண்கள், உட்கார இடமின்றி, கால்கடுக்க நின்று சிரமப்பட்டனர். குடிக்க தண்ணீர் வசதியும் போதிய அளவில் இல்லை. மேலும், ஆதார் திருத்தம், மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றிற்கான படிவங்களும் கிடைக்காததால், முகாமிற்கு வந்தோர் அதிருப்தி அடைந்தனர். இதனால் அவர்கள், அங்கிருந்த அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, ஆய்வுக்கு வந்த சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளை பார்த்து, அதிகாரிகளை வசைபாடினார். மேலும், உடனடியாக கூடுதல் இருக்கைகளை அமைக்கவும், குடிநீர் வசதியை உடனடியாக பூர்த்தி செய்யவும், ஊராட்சி செயலரை கடிந்து கொண்டார். மேலும், கூடுதல் படிவங்கள் கிடைக்க வழிவகை செய்ய உத்தரவிட்டார். முகாமிற்கு வந்த பயனாளிகள் கூறியதாவது: பெரும்பாக்கம் ஊராட்சி அலுவலக பகுதியில் வசிப்போருக்கான முகாமில், இந்திரா நகர், நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதிமக்களும் பங்கேற்றதால், மனு படிவங்கள் கிடைக்கவில்லை. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக முகாம் நடப்பதை, ஊராட்சி நிர்வாகம் அறிவிக்காததால் இந்த குளறுபடி ஏற்பட்டது. அதனால், இம்முகாமிற்கு வந்தும் பலன் அடையவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை