மேடவாக்கம்: ''தேசிய 100 நாள் வேலை உறுதி திட்டத்தில், காந்தியின் பெயரை மத்திய அரசு நீக்கியது மன்னிக்க முடியாதது. திட்டத்தை ரத்து செய்யும் நோக்கில் பா.ஜ., அரசு செயல்படுகிறது,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை, 'வி.ஜி. ராம் ஜி' என, மத்திய அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இதைக் கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், சென்னை மேடவாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்று, மத்திய அரசின் செயலை கண்டித்து கோஷம் எழுப்பினர். விழாவில், தலைவர்கள் பேசியதாவது: ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: எந்த காரணத்தால் 100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கினர்; இந்தியாவை பாரத் என்றும், தலைநகரை வாரணாசிக்கும் மாற்ற துடிக்கின்றனர். மத்திய அரசு, காந்தியின் பெயரை நீக்கியது மன்னிக்க முடியாதது. திட்டத்தை ரத்து செய்யும் நோக்கில் பா.ஜ., அரசு செயல்படுகிறது. வி.சி., தலைவர் திருமாவளவன்: திட்டத்தின் பெயரை மாற்றி, 25 நாட்கள் கூடுதலாக வேலை தருகிறோம் என்கின்றனர். ஆனால், அதற்கான நிதியில், 40 சதவீதத்தை மாநில அரசுகளின் தலையில் சுமத்துகின்றனர். நிதிச்சுமையை காரணம் காட்டி, இத்திட்டத்தை ரத்து செய்வதே பா.ஜ.,வின் உள்நோக்கம். மதச்சார்பற்ற இந்தியா உருவாக வேண்டும் என, நினைத்த காந்தியின் பெயரை நீக்கி, ராம் என வரும்படி பெயர் வைத்துள்ளனர். ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா: கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்த காந்தி பெயர் கொண்ட திட்டத்தை, மத்திய அரசு மாற்றியுள்ளது. விவசாயத்தில் இயந்திரம் வந்துவிட்டது; 125 நாள் வேலை என்பது எல்லாம் பித்தாலாட்டம். இவ்வாறு அவர்கள் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்., முன்னாள் தலைவர் தங்கவேலு, மா.கம்யூ., முன்னாள் மாநில செயலர் பாலகிருஷ்ணன், இ.கம்யூ., மாநில செயலர் வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.