தம்புல்ஸால் பீஹார் இளைஞரை அடித்து கொன்ற சிறுவன் கைது
சென்னை:ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் இந்தர்சந்த், 64; ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். இவரது வீட்டில் தங்கி, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் குமார், 18, மற்றும் 15 வயது சிறுவன் வேலை செய்து வந்தனர்.தினசரி வேலை முடிந்தவுடன், ராகுல் குமார் உடன் பணிபுரிந்த சிறுவனிடம் கை கால் அழுத்தவும், அவருக்கு தேவையான பணிவிடை செய்யும்படி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இது தொடர்பாக, 24ம் தேதி பிற்பகல் 3:30 மணியளவில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிறுவன், உடற்பயிற்சி செய்வதற்கான இரும்பு உபகரணமான 'தம்புல்ஸால்' ராகுல் குமாரை சரமாரியாக அடித்து தப்பிச் சென்றார்.படுகாயமடைந்த ராகுல் குமார், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்கு பதிந்து 15 வயது சிறுவனை, எழும்பூர் போலீசார் கைது செய்தனர்.