உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கண்ணகிநகர், செம்மஞ்சேரி குடியிருப்புகளில் கிரைய பத்திரம் பெறாத 30,000 குடும்பங்கள் வாரிய முயற்சியை கெடுக்கும் புரோக்கர்கள்

கண்ணகிநகர், செம்மஞ்சேரி குடியிருப்புகளில் கிரைய பத்திரம் பெறாத 30,000 குடும்பங்கள் வாரிய முயற்சியை கெடுக்கும் புரோக்கர்கள்

சென்னை,:நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கண்ணகிநகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில், 50,000க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டியது. இதில், 2000ம் ஆண்டு முதல், பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டது.ஒதுக்கீடு ஆணை பெற்று, தொடர்ந்து வசிப்பவர்கள், 20,000க்கும் குறைவானவர்கள்தான். மீதமுள்ள வீடுகளில், ஒதுக்கீட்டாளர்களிடம் இருந்து விலை கொடுத்து வாங்கியோர், வாடகைதாரர்கள் வசதித்து வருகின்றனர்.இவர்களில், 2016 டிசம்பருக்குமுன் விலைக்கு வாங்கி இருந்தால், அபராதம் செலுத்தி, அவர்கள் பெயரில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இது தொடர்பாக வாரியம், ஐந்து ஆண்டுகளாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.ஆனால், சில புரோக்கர்கள், விலைக்கு வாங்கியவர்களிடம் தவறாக தகவலை பரப்பி, பெயர் மாற்றம் செய்யாமல் பார்த்துக் கொள்கின்றனர். மேலும், 10, 15 வீடுகளை வாங்கி, வாடகை விட்டு சம்பாதிப்பவர்களும், பெயர் மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், 30,000 குடும்பங்களுக்கு, பெயர் மாற்றம் செய்து, கிரைய பத்திரம் வழங்க முடியாமல் வாரியம் திணறுகிறது.இதுகுறித்து, வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மொத்த வீடுகளில், 300க்கும் குறைவானவர்களே கிரைய பத்திரம் பெற்றுள்ளனர். விலைக்கு வாங்கியவர்கள், அவர்கள் பெயரில் கிரைய பத்திரத்தை மாற்ற, 25,000 ரூபாய் அபராதம் இருந்தது. தற்போது, 5,000 ரூபாயாக குறைக்கப்பட்டுவிட்டது. பெயர் மாற்றம் செய்தவர்கள், உரிய தொகை செலுத்தினால், அவர்கள் பெயரில் கிரைய பத்திரம் செய்து கொடுக்கப்படும். வரி வசூலிப்பாளர்கள், சமுதாய வளர்ச்சி பிரிவு ஊழியர்கள், வீடுவீடாக சென்று பேசுகின்றனர். சில புரோக்கர்கள், மக்களை குழப்பி, அரசு அவர்களுக்கு வழங்கிய உரிமையை கிடைக்க விடாமல் செய்கின்றனர். இதனால், வாரியம் எடுக்கும் முயற்சிகளுக்கு, கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும். அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய உதவ வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

குழப்பம் ஏன்?

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சில புரோக்கர்கள், 5, 10, 15 வீடுகளை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த வீடுகளுக்கான ஆதாரை இணைக்க வில்லை. மனைவிக்கு தெரியாமல், கணவருக்கு சில ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்து, அவை லட்ச ரூபாயாக மாறும்போது, வீட்டை எழுதி வாங்கி விடுகின்றனர். அந்த வீடுகளை, கூடுதலாக சில லட்சம் ரூபாய் பேசி, வேறு நபருக்கு புரோக்கர்கள் விற்கின்றனர்.இதற்கு முன், கணவர் பெயரில் வீடு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இப்போது, மனைவி பெயரில் வழங்குவதால், பெயர் மாற்றம் செய்து, கிரைய பத்திரம் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏழைகளின் அறியாமையை பயன்படுத்தி ஏமாற்றுபவர்களால் தான், பெயர் மாற்றமும், கிரைய பத்திரமும் வழங்க முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை