ஆவடி: ஆவடியில், சாலையில் படுத்திருந்த நபரை அடித்து விரட்டிய ஆட்டோ ஓட்டுநரை, செங்கல்லால் தாக்கிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். ஆவடி, காமராஜர் நகர், ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்தவர் முத்து, 53; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று அதிகாலை சவாரி முடித்து ஸ்ரீதேவி நகரில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டுக்கு திரும்பியுள்ளார். ஆட்டோ ஸ்டாண்டு அருகே சாலையோரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், 51 என்பவர், போதையில் படுத்திருந்தார். அப்போது மது போதையில் இருந்த முத்து, 'இங்கெல்லாம் படுக்கக் கூடாது' எனக் கூறி, அவரை அடித்து விரட்டி உள்ளார். இது குறித்து ஸ்ரீனிவாசன் அவரது மகன்களிடம் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த ஸ்ரீனிவாசனின் மகன்கள் ஜெபராஜ், 23, அருள், 21 ஆகியோர் வந்து ஆட்டோவில் துாங்கிக்கொண்டிருந்த முத்துவை, செங்கல்லால் தாக்கியதில் முகம், தலை வீங்கியது. காயமடைந்த முத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்படி, ஆவடி போலீசார் ஜெபராஜ், அருள் ஆகியோரை, கைது செய்தனர். அருள் ஐ.டி., ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.