உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பகிங்ஹாம் - உத்தண்டி வரை மூடுகால்வாய் திட்டம்...பலன் இருக்குமா?

பகிங்ஹாம் - உத்தண்டி வரை மூடுகால்வாய் திட்டம்...பலன் இருக்குமா?

சென்னை, தென் சென்னையில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு பகிங்ஹாம் கால்வாயில் இருந்து உத்தண்டி கடற்கரை வரை அமைக்கப்பட உள்ள மூடுகால்வாயால் எந்த பலனும் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாத்தியக்கூறு ஆராயாமல், இப்பணிகளுக்கு, 91 கோடி ரூபாயை நீர்வளத் துறைக்கு நிதித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென் சென்னையில் உள்ள 61 ஏரிகளிலிருந்து நிரம்பி வெளியேறும் உபரிநீர், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வருகிறது. அங்கிருந்து வினாடிக்கு 8,500 கனஅடி வெள்ளநீர் வெளியேறி, ஒக்கியம் மடுவு வழியாக தெற்கு பகிங்ஹாம் கால்வாயை அடைகிறது. இக்கால்வாயில் இருந்து வினாடிக்கு 7,000 கனஅடி நீரை மட்டுமே வங்க கடலுக்கு அனுப்ப முடியும். தெற்கு பகிங்ஹாம் கால்வாய் 24 கி.மீ., நீளம் உடையது. அதில், ஒக்கியம் மடுவு 10.5 கி.மீ.,யில் வந்து இணைகிறது. இங்கிருந்து வெள்ளநீர், கடல்நீரை அடைவதற்கு 13.5 கி.மீ., பயணிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக்காலத்தில் அதிகப்படியாக தண்ணீர் சென்றால், தெற்கு பகிங்ஹாம் கால்வாயின் பகுதிகளான வேளச்சேரி, ராம்நகர், பள்ளிக்கரணை, நாராயணபுரம், மடிப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில், வெள்ளநீர் அதிகளவில் தேங்கி பாதிப்பு ஏற்படும். இதை தடுக்க, உத்தண்டி கடல்சார் பல்கலை அருகில் இருந்து 2 கி.மீ.,க்கு மூடுகால்வாய் அமைத்து கிழக்கு கடற்கரை சாலையை கடந்து, வங்க கடலில் வெள்ளநீர் கொண்டு சேர்க்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வினாடிக்கு 500 கனஅடி நீரை வெளியேற்றலாம் என, நீர்வளத்துறை கணக்கு போட்டுள்ளது. இந்த கால்வாய் அமைக்கும் பணிக்காக நீர்வளத் துறைக்கு 91 கோடி ரூபாயை, நிதித்துறை வழங்கியுள்ளது. கால்வாய் அமைக்கும் பணியை, இரு நாட்களுக்கு முன், துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்துள்ளார். ஆனால், இந்த கால்வாய் வாயிலாக, தென்சென்னை பகுதிகளில் வெள்ளநீர் வடிவதற்கு பெரிய அளவில் பயன் கிடைக்காது என்ற தகவல் அம்பலமாகியுள்ளது. முறையாக சாத்தியக்கூறுகளை ஆராயாமல், நீர்வளத்துறை நிதி பெற்றுள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் கறாராக கணக்கு பார்க்கும் நிதித்துறை உயர் அதிகாரிகள், இவ்விஷயத்தில் ஏமாந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கால்வாயால் பலனில்லை

நீர்வளத்துறை வல்லுநர்கள் கூறியதாவது: பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாக 8,500 கனஅடி நீர் வெளியேறும் என நீர்வளத்துறை சொல்கிறது. தெற்கு பகிங்ஹாம் கால்வாய் வழியாக 7,000 கனஅடி நீரை மட்டுமே வெளியேற்ற முடியும். புதிதாக 6 அடி அகலம், 2 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மூடுகால்வாய் மூலம் 500 கனஅடி நீரை வெளியேற்ற முடியும் என்கின்றனர். அப்படியென்றால், மீதமுள்ள 1,000 கனஅடிநீரை வெளியேற்ற என்ன வழி உள்ளது. மேலும், பருவமழை காலங்களில் புயல் சின்னம் உருவாகும்போது, கடலில் சீற்றம் ஏற்படும். அப்போது, பகிங்ஹாம் கால்வாயில் இருந்து நீர்வடியாது. வினாடிக்கு 200 கனஅடி வெளியேற்றினால்கூட பெரிய விஷயம்தான். மழைக்காலம் முடிந்த பின், கடலில் இருந்து மூடுகால்வாய்க்குள் நீர் செல்லும். அதனுடன் மணல் சென்று அடைத்துக்கொள்ளும். மூடுகால்வாய் என்பதால், மணல் அடைப்பை சரி செய்யவும் வாய்ப்பில்லை. இந்த சாத்தியக்கூறுகளை ஆராயாமல், இந்த திட்டத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. திட்டத்தை துவங்கி வைத்த துணைமுதல்வர் உதயநிதி, 'வரும் காலங்களில் தென்சென்னையில் வெள்ளபாதிப்பு ஏற்படாது என நம்புகிறோம்' என்று தான் கூறியுள்ளார். அவருக்கே நம்பிக்கையில்லை. இந்த நிதியில் ஒருபகுதியை பயன்படுத்தி தெற்கு பகிங்ஹாம் கால்வாயை முழுமையாக துார்வாரினால், ஐந்து ஆண்டுகளுக்கு எந்த பிரச்னையும் இருக்காது. இப்போதும் ஒன்றும் முடிந்துவிடவில்லை. முறையாக ஆய்வு செய்த பின் பணிகளை துவங்க வேண்டும். வெள்ளநீரை வெளியேற்ற மழைநீர் கால்வாய் கட்டுவதால், எந்த பலனும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Karthikeyan Palanisamy
ஆக 09, 2025 04:47

ஏன் இல்லை... யாருக்கு பலன் இல்லை... எங்கள் திருட்டு திராவிடத்திற்கு பலன் இல்லாமல் ஒரு திட்டம் வருமா இல்லை வரமுடியுமா


புதிய வீடியோ