பஸ் வளாகம், வடிகால், சாலை பணிகளுக்கு...-ரூ.1,200 கோடி! நாய் கட்டுப்பாட்டு மையம் அதிகரிக்க முடிவு
சென்னை, சென்னை பிராட்வேயில் பல்நோக்கு போக்குவரத்து பேருந்து வளாகம், மழைநீர் வடிகால், பாலம், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள், 1,200 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த, புதிதாக பல இடங்களில் நாய் இன கட்டுப்பாட்டு மையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியின் மாதந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில், 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் சில தீர்மானங்கள்:பிராட்வே பேருந்து நிலையத்தில், குறளகத்தை உள்ளடக்கிய பல்வேறு போக்குவரத்து இணைப்புகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பல்நோக்கு போக்குவரத்து பேருந்து வளாகம், 822.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. இதில், மாநில நகர்புற உள்கட்டமைப்பு நிதியின் கீழ், 506.83 கோடி ரூபாய் கடனாக பெற, மாநகராட்சி அனுமதி அளித்து உள்ளது ஓட்டேரி கால்வாயின் குறுக்கே, நியூ பேரன்ஸ் சாலையில் தற்போதுள்ள பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டுதல், விருகம்பாக்கம் கால்வாயின் குறுக்கே, கோ.சு.மணி சாலையில், தற்போது உள்ள பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டுதல் உள்ளிட்ட ஆறு இடங்களில், 39.98 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது அண்ணா நகர் மண்டலத்தில், அம்பேத்கர் சாலை சந்திப்பு, கான்ஸ்டேபல் சாலை உள்ள ஐ.சி.எப்., கால்வாய் உள்ளிட்ட இடங்களில் புதிதாக, ஆறு இடங்களில், 31.43 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் உள்ள, 386 'அம்மா' உணவகங்கள், 18.08 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளனசென்னை மாநகராட்சியில் உள்ள, 1,669 எண்ணிக்கையிலான உட்புற மற்றும் பேருந்து தட சாலைகள், 31 எண்ணிக்கையிலான சிமென்ட் சாலைகள், 290 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட உள்ளது. இதில், 90 கோடி ரூபாய் மாநகராட்சியும், 200 கோடி ரூபாய் கடன் அல்லது மானியம் பெற்று சீரமைக்கப்படும். அதன்படி, 1,200 கோடி ரூபாய்க்கு மேல் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதுஇதுதவிர, 8,340 எண்ணிக்கையிலான சாலைகளில் உள்ள பழைய பெயர் பலகையை நீக்கி, புதிதாக டிஜிட்டல்பெயர் பலகை அமைக்கப்பட உள்ளதுசென்னையில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சிசார்பில் புளியந்தோப்பு, கண்ணாம்மாபேட்டை, லாயிட்ஸ் காலனி, மீனம்பாக்கம், சோழிங்கநல்லுார் ஆகிய ஐந்து இடங்களில், நாய் இன கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படுகின்றன. மேலும், மணலி, மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம், பெருங்குடி என, ஐந்து மண்டலங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. திருவொற்றியூர், தண்டை யார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், அடையாறு மண்டலங்களிலும், நாய் இன கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது சென்னையில் அனுமதியற்ற இண்டர்நெட் எனும் இணைய கம்பங்களுக்கு, 1 லட்சம் ரூபாய்; அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கூடுதலாக அமைத்த கம்பத்திற்கு, 75,000 ரூபாய்; ஒழுங்கற்ற முறையில் அமைத்திருந்தால், 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் சென்னை கடற்கரைகளில் சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கான தொழுவங்கள், சேப்பாக்கம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் பகுதிகளில் அமைக்கப்படும் மாநகராட்சி பள்ளியில் தற்காலிக முறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம்,11,970 ரூபாயிலிருந்து, 14,150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயாக்களுக்கான சம்பளம், 8,850 ரூபாயிலிருந்து, 10,450 ரூபாயாக உயர்த்தப்படுகிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாட்டிற்கு மாநகராட்சி உரிமை கோராது!
மாநகராட்சி கவுன்சிலர்கள் பலர், 'குப்பை கொட்டுதல், சாலையில் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை அதிகமாக உள்ளது. அவற்றை குறைக்க வேண்டும். ஒரே நபரிடம் அடிக்கடி அபராதம் வசூலிக்கப்படுகிறது. அவற்றை குறைக்க வேண்டும்; இலக்கு நிர்ணயிக்க கூடாது' என்றனர்.இதற்கு மேயர் பிரியா, அபராத தொகை குறைக்கப்படாது. குப்பை கொட்டுவோரிடம் அபராதம் வசூலிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை. மண்டலங்களில், மாட்டு தொழுவங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. வரும், பிப்., மாதத்திற்குள்முடிவடையும். அங்கே மாட்டின் உரிமையாளர்கள், மாடுகளை பராமரித்து கொள்ள முடியும். ''இடம் மற்றும் மாட்டிற்கு தீவனத்தை மாநகராட்சி வழங்கும். மற்றப்படி, மாட்டிற்கு மாநகராட்சி உரிமை கோராது. பால் கறப்பது, கன்றுகளை பராமரிப்பது உள்ளிட்டவற்றை உரிமையாளரே மேற்கொள்ளலாம்,'' என்றார்.
கமிஷனர் மீது புகார்
மார்க்.கம்யூ., கட்சி கவுன்சிலர்கள் ஜெயராமன், பிரியதர்ஷினி ஆகியோர் பேசுகையில், ''வார்டு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி கமிஷனரை சந்திக்க அவரது அறைக்கு சென்றபோது, 'கெட் அவுட். வேஸ்ட் மை டைம்' எனக்கூறி எங்களை மாநகராட்சி கமிஷனர் அவமானப்படுத்தினார்,'' என்றனர்.இதற்கு மேயர் பிரியா பதில் அளிக்கையில், ''பல்வேறு ஆலோசனை கூட்டங்கள், ஆய்வுகள், நிகழ்ச்சிகள் போன்ற பணிச்சூழலால், கமிஷனர் அவ்வாறு தெரிவித்து இருப்பார். வரும் காலங்களில் இதுபோன்று நிகழாது,'' என்றார்.''எவ்வளவு பணிச்சூழல் இருந்தாலும், கவுன்சிலர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை,'' என, கவுன்சிலர் பிரியதர்ஷினி கூறினார். கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தப்போது, கமிஷனர் அமைதியாக இருந்தார்.
5,061 பணியிடம் காலி
கூட்டத்தில் பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்த், ''கடந்த மூன்றாண்டுகளில் மாநகராட்சியில், புதிதாக கட்டப்பட்ட பள்ளிகள் எவ்வளவு; மாநகராட்சியில் உள்ள காலி பணியிடங்கள் எவ்வளவு,'' என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, ''சென்னை மாநகராட்சியில் பல்வேறு துறையில் மொத்தம், 5,061 காலி பணியிடங்கள் உள்ளன. மூன்று ஆண்டுகளில், புதிதாக பள்ளிகள் எதுவும் துவங்கப்படவில்லை. ஏற்கனவே செயல்படும் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது,'' என்றார்.