பசுல்லா சாலையில் செல்ல வேண்டிய பஸ்கள் ராஜாச்சார் தெருவில் செல்வதால் அவதி
தி.நகர்: பசுல்லா சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையம் செல்லும் மாநகர பேருந்துகளை, குறுகிய சாலையான ராஜாச்சார் தெரு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளதால், அப்பகுதிமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தி.நகர், பசுல்லா சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலை சந்திப்பு சிக்னலில் ஏற்படும் நெரிசலை குறைக்க, மாநகர பேருந்துகளுக்கு மட்டும், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணா சாலையில் இருந்து வரும் பேருந்துகள், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, திருமலைப்பிள்ளை சாலை வழியாக பசுல்லா சாலை சிக்னல் சென்று, தி.நகர் செல்வது வழக்கம். தற்போது, இப்பேருந்துகள் பசுல்லா சாலையில் சென்று ராகவையா சாலையில் இடது புறம் திரும்பி, ராஜாச்சார் தெரு வழியாக, வடக்கு உஸ்மான் சாலை 'ஜாய் ஆலுக்காஸ்' அருகே சென்று, இடது புறம் திரும்பி, தி.நகர் புது மேம்பாலம் வழியாக பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையில் மாற்றப்பட்டு உள்ளது. அதேபோல், ஜி.என்.செட்டி., சாலையில் இருந்து வரும் பேருந்துகள், கண்ணதாசன் சிலை அருகே ராகவையா தெரு வழியாக, ராஜாச்சார் தெரு சென்று, அங்கிருந்து வடக்கு உஸ்மான் சாலை வழியாக, தி.நகர் புது மேம்பாலத்தை பயன்படுத்தி பேருந்து நிலையம் செல்லும்படி திருப்பி விடப்பட்டுள்ளது. இதற்கு, ராஜாச்சார் தெருவில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேருந்துகள் இவ்வழியே செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக, மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். அப்பகுதிமக்கள் கூறுகையில், 'குறுகலான தெருவான ராஜாச்சார் தெருவில், பேருந்துகள் செல்வதில் சிரமம் உள்ளது; இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன், குடியிருப்பு மக்கள், தங்கள் வாகனங்களை வீட்டில் இருந்து வெளியே எடுத்து வரவும் சிக்கல் ஏற்படுகிறது; விபத்து அபாயம் நிலவுகிறது' என்றனர். போக்குவரத்து போலீசார் கூறுகையில், 'ராஜாச்சார் தெருவில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றினால், சாலை இன்னும் விரிவடையும், போக்குவரத்திற்கும் ஏதுவாக இருக்கும். வாகன ஓட்டிகள் நலனுக்காகதான் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளோம்' என்றனர்.