ரூ.2,500ல் புற்றுநோய் கண்டறியும் சோதனை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அறிமுகம்
சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் முழு உடல் பரிசோதனை மையத்தில், 2,500 ரூபாய் கட்டணத்தில், புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறியும் பரிசோதனைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 10 கோடி ரூபாய் மதிப்பில், முழு உடல் பரிசோதனை மையம், 2018ல் துவங்கப்பட்டது. இங்கு, கோல்டு, டைமண்ட், பிளாட்டினம், பிளாட்டினம் பிளஸ் என, நான்கு வகையான பரிசோதனைகள் முறையே 1,000, 2,000, 3,000, 4,000 ரூபாய் என்ற கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது.முழு ரத்தப் பரிசோதனை முதல் இதய செயல்பாட்டைக் கண்டறியும், 'டிரெட்மில்' பரிசோதனைகள் வரை செய்யப்படுகின்றன. இதுவரை, 75,000க்கும் மேலானோர் பயன்பெற்றுள்ளனர்.புதிய சேவை குறித்து, மருத்துவமனை இயக்குனர் ஆர். மணி கூறியதாவது:மருத்துவமனையில், புற்றுநோய்க்கு பிரத்யேக மருந்தியல், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, வலி மற்றும் நிவாரண சிகிச்சை, இடையீட்டு கதிர்வீச்சு சிகிச்சை உள்ளிட்ட துறைகள் செயல்பட்டு வருகின்றன.அதற்கான அதிநவீன உபகரணங்களும், மருத்துவக் கட்டமைப்புகளும் உள்ளன. அறிகுறிகள் தென்படும் முன், ரத்த பரிசோதனைகளை மேற்கொள்வதன் வாயிலாக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.இவை, 'டைட்டானியம்' என்ற பரிசோதனை திட்டம் துவங்கப்பட்டு, 2,500 ரூபாய் கட்டணத்தில் பரிசோதனை செய்யப்படும். அதன்படி, விந்தணு சுரப்பி, கருப்பை, கணையம், கருப்பை வாய், கல்லீரல், தைராய்டு சுரப்பி, மார்பகம், நிணநீர், ரத்தம், செல்கள், குடல், இரைப்பை சார்ந்த புற்றுநோய் பரிசோதனை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினர்.***