மணலி தி.மு.க., மண்டல குழு தலைவர் மீது வழக்கு பதிவு
மணலி:கொடுங்கையூர், முத்தமிழ் நகர், தெற்கு அவென்யூவைச் சேர்ந்த ரமேஷ், இவருக்கு சொந்தமான, மாதவரம், பெரியசேக்காடு, காமராஜர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை, மணலியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கு விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளார்.அதன்படி, டிச., 2023ல், 18.36 கோடி ரூபாய் நிர்ணயம் செய்து, 45 லட்ச ரூபாய் முன்பணமாக பெற்றுக் கொண்டு, ஒப்பந்த பத்திரம் போடப்பட்டு உள்ளது.ஆறு மாதத்திற்குள், முழு தொகையையும் செலுத்தி, கிரையம் செய்துக் கொள்வதாக கூறியிருந்தார். ஆனால், முழு தொகையையும் செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், இது குறித்து கேட்டபோது, முருகன் தரப்பில் இருந்து மிரட்டியதாக கூறப்படுகிறது.இது குறித்து, டிச., 2024ல், ரமேஷ் தரப்பில், மணலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், ரமேஷின் மனைவி வள்ளி, 37, திருவொற்றியூர், நீதிமன்றத்தில் வழக்கில் நடவடிக்கை கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.நீதிமன்ற உத்தரவின்படி, நேற்று முன்தினம் இரவு, மணலியைச் சேர்ந்த முருகன், அவரது சகோதரரான தி.மு.க., மணலி மண்டல குழு தலைவர் ஆறுமுகம், திருநாவுக்கரசு, முனுசாமி ஆகியோர் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடக்கிறது.அதிகாரியை மிரட்டி பணம் கேட்டதாக திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் மீது புகார் எழுந்துள்ள நிலையில், மணலி மண்டல குழு தலைவர் மீது பொதுமக்களை மிரட்டியது தொடர்பாக புகார் எழுந்துள்ளது, கட்சி வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.