| ADDED : ஆக 26, 2011 01:35 AM
சென்னை : 'தினமலர்' செய்தி எதிரொலியாக, கண்ணகி நகரில், சாலை மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிக்கான பணிகள் வேகம் பிடித்துள்ளது. ஒக்கியம் துரைப்பாக்கத்தை அடுத்த, கண்ணகி நகரில் நிலவும் பிரச்னைகள் குறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் விரிவாக செய்தி வெளியானது. தற்போது அப்பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருவதாக, குடிசை மாற்று வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பு: கண்ணகி நகரில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஏற்படுத்தியுள்ள அனைத்து சாலைகளும், ஒக்கியம் துரைப்பாக்கம் ஊராட்சி வசம், பிற்கால பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது ஊராட்சியினர், கண்ணகி நகரில் உள்ள முக்கிய சாலைகளை புதிதாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். விரைவில் அனைத்து சாலைகளையும் மேம்படுத்த உள்ளனர். சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை சீராக பராமரிக்கவும், புதிய காவல் நிலையம் கட்டுவதற்காக, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தனியாக சுமார் 1, 250 ச.மீ.காலி நிலத்தை ஒப்படைத்துள்ளது. புதிய காவல் நிலையம் கட்டும் ஆயுத்த பணிகளையும் காவல் துறை மேற்கொண்டுள்ளது. மேலும், 'ஹேண்ட் இன் ஹேண்ட்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம், தினசரி குப்பைகளை அகற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிரமங்களுக்கிடையேயும் கண்ணகி நகரில் வசிக்கும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.