சென்னை : சென்னை மாநகராட்சி, 'கிரேட்டர் சென்னை'யாக உருவாக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதனுடைய புதிய வார்டுகள், மண்டலங்கள் ஆகியவற்றிற்கு மாநகராட்சி அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கான தீர்மானங்கள், மேயர் சுப்ரமணியன் தலைமையில் நேற்று நடந்த சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சென்னை மாநகராட்சியிலிருந்த, 155 வார்டுகள், 107 வார்டுகளாக மறு சீரமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டுள்ள, ஒன்பது நகராட்சி, எட்டு பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள், 93 மாநகராட்சி வார்டுகளாக உருவாக்கப்பட்டுள்ளன. 200 வார்டுகளை பராமரிப்பதற்காக, புதிதாக, 15 மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ஏற்கனவே இருந்த மாநகராட்சியின், 10 மண்டலங்கள் கலைக்கப்பட்டுள்ளன. புதிய மண்டலங்கள்: திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க., நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், அடையார், ஆகியவை புதிய மண்டலங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த, 15 மண்டலங்களும் நிர்வாக வசதிக்காக, சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை மத்தி ஆகிய மூன்று பெரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, இம்மண்டலங்களுக்கு, இணை ஆணையர் அல்லது கூடுதல் அணையர் பொறுப்பில் அலுவலர்கள் நியமிக்க, மாநகராட்சி முடிவு செய்து, இதற்கான தீர்மானமும், நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி வார்டுகளில் அமைக்கப்படவுள்ள ஓட்டுச் சாவடிகள் மற்றும் வார்டுகளில், யார் யார் போட்டியிட முடியும் என்ற தீர்மானமும், நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநகராட்சியில் மொத்தமுள்ள, 200 வார்டுகளில், 1,384 ஆண் ஓட்டு சாவடிகளும், 1,384 பெண் ஓட்டு சாவடிகளும், 2,109 பொது வாக்குச் சாவடிகளும் என, 4,877 ஓட்டு சாவடிகளும் அமைக்கப்படுகின்றன. இதற்கு மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள், மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் வெளியிடுவதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்தார். வார்டு ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு: 200 வார்டுகளில், பெண்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் ஒதுக்கப்பட்டவை ஒரு பகுதிலேயே குவிந்திருப்பதாகவும், அதை பராவலாக்க வேண்டும் என்றும், அனைத்து கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சட்டசபை தொகுதி அடிப்படையில், வார்டுகளை போட்டியாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'இத்தீர்மானத்தை உள்ளாட்சித் துறை செயலருக்கு உடனே அனுப்பி, பரிசீலனை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படும்' என, மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.