சென்னை : முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய வழக்கில், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது கான்ஸ்டபிள் மகன், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சென்னை அடையாறை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர். இவர், 18ம் தேதி, தனது மனைவி மற்றும் மகனுடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அடையாறு தி.ரு.வி.க., பாலம் அருகே சென்ற போது, இவர்களின் காருக்கு முன்னால் பைக்கில் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், காருக்கு வழிவிடாமல் சென்றார். நீண்ட நேரமாக ஹாரன் அடித்தும் வழிவிடவில்லை. இதனால், காரில் பயணித்தவர்களுக்கும், போலீஸ் கான்ஸ்டபிளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதை,கேள்விப்பட்டு போலீஸ் கான்ஸ்டபிளின் தந்தையும், மடிப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டருமான சங்கர் சம்பவ இடத்திற்கு வந்தார். இரு தரப்பினருக்கும் தகராறு முற்றிய நிலையில், முன்னாள் ராணுவ வீரர் சந்திர சேகர், அவரது மனைவி மற்றும் மகனை, சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் அவருடன் வந்தவர்கள் தாக்கினர். இதில், முன்னாள் ராணுவ வீரருக்கு உதடு கிழிந்தது. இதுதொடர்பாக, சந்திரசேகர், சாஸ்திரி நகர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார். அங்கு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சந்திரசேகர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் அவரது மகன் போலீஸ் கான்ஸ்டபிள் சிவகொழுந்து இருவரையும், சஸ்பெண்ட் செய்து, போலீஸ் கமிஷனர், நேற்று அதிரடி உத்தரவை வெளியிட்டார்.