உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரிசர்வ் வார்டுகள்: புழல் பகுதி மக்கள் எதிர்ப்பு

ரிசர்வ் வார்டுகள்: புழல் பகுதி மக்கள் எதிர்ப்பு

சென்னை : கிரேட்டர் சென்னையுடன் இணையும் புழல் ஒன்றிய வார்டுகள், ரிசர்வ் வார்டுகளாக ஒதுக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அவற்றை பொது வார்டுகளாக அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் கமிஷனிடம் மனுக் கொடுத்துள்ளனர்.சென்னை மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டு, கிரேட்டர் சென்னையாக உருவாக்கப்படுகிறது. இதற்காக, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் என 42 உள்ளாட்சி அமைப்புகள் கிரேட்டர் சென்னையுடன் இணைக்கப்பட்டுள்ளன.புதிதாக இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளும், ஏற்கனவே உள்ள சென்னை மாநகராட்சி வார்டுகளும் சீரமைக்கப்பட்டு, 200 மாநகராட்சி வார்டுகளாக உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த வார்டுகளில், போட்டியிடும் தேர்தல் அமைப்பு முறையும் தயார் செய்யப்பட்டு உள்ளது.இதில், புழல் ஒன்றிய வார்டுகள், கிரேட்டர் சென்னையின் 16, 19, 24, 25 ஆகிய வார்டுகளாகவும், இவற்றில், தாழ்த்தப்பட்டவர்கள் போட்டியிடும் வகையில் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, அப்பகுதியின் ரேவதி நகர், திருமால் நகர், நேரு நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நல்வாழ்வு சங்கங்கள், மாநில தேர்தல் கமிஷனிடம் அளித்த மனு:புழல் ஒன்றியத் தலைவர் பதவி 2006ம் ஆண்டு வரை தாழ்த்தப்பட்ட பிரிவினர் போட்டியிடும் வகையில் ஒதுக்கப்பட்டு இருந்தது. சுழற்சி முறையில், தற்போது தான் அப்பதவி பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், புழல் ஒன்றியத்தின் வார்டுகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு 16, 17, 24, 25 வார்டுகளாக உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த நான்கு வார்டுகளும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்படுவதால், பொதுப்பிரிவினர் முற்றிலும் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.ஒரு ஒன்றியத்தின் அனைத்துப் பகுதியும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்படுவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொதுப் பிரிவினருக்கு வாய்ப்பளிக்கும் வகையில், புழல் ஒன்றிய வார்டுகளில் போட்டியிடும் அமைப்பு முறையைத் திருத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் நல்வாழ்வு சங்கத்தினர் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி