பூந்தமல்லி: மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீப், 30. கட்டுமான தொழிலாளி. இவர், கடந்த 2017ம் ஆண்டு, பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் தங்கி பணியாற்றிய நண்பர்களான ராஜுன்கின்கு, 25, அன்சார், 24, ஆகியோரை பார்க்க சென்றார். அன்று இரவு மது அருந்தியபோது, அங்கு பணியாற்றும் சென்னையை சேர்ந்த ஹரிகுமார், 35, என்பவரும், இவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். மது போதையில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஹரிகுமார் தள்ளி விட்டதில், 2வது மாடியில் இருந்து கீழே விழுந்த பிரதீப், சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து, ராஜுன்கின்கு, அன்சார் ஆகியோரின் உதவியுடன், பிரதீப் உடலை எடுத்து சென்ற ஹரிகுமார், காட்டுப்பாக்கத்தில் உள்ள குப்பையில் வீசி தீ வைத்து எரித்துள்ளார். இதுகுறித்து விசாரித்த பூந்தமல்லி போலீசார், ஹிரிகுமார், ராஜுன்கின்கு, அன்சார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இதில், குற்றவாளிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஹரிகுமாருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த ராஜுன்கின்கு, அன்சாரி ஆகியோருக்கு தலா இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி விஜயகுமார் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.