திருவொற்றியூரில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடல் அமைக்க பயிற்சியாளர்கள் கோரிக்கை
திருவொற்றியூர்,'திருவொற்றியூரில், ஒருங்கிணைந்த விளையாட்டு திடல் அமைக்க வேண்டும்' என, முன்னாள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கபடி, சிலம்பம், குத்துச்சண்டை, வாலிபர், கால்பந்து, இறகுபந்து, வலைகோல் பந்து உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளில், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தோர் சிறந்து விளங்கி வந்தனர். முன், 1990களில் விம்கோ நகரில் இருந்த விளையாட்டு திடலில், கால்பந்து பயிற்சி மேற்கொண்ட அணியினர், தேசிய அளவில் தடம்பதித்தனர். விளையாட்டில் தேசிய அளவில் தடம் பதித்த திருவொற்றியூரில், தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த விளையாட்டு திடல் ஏதும் இல்லாததால், பலரும் பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக, விளையாட்டுகளில் ஆர்வம் காட்டிய சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், சரியான வழிவகையின்றி, பயிற்சிகளை கைவிட்டுள்ளனர்.இது குறித்து முன்னாள் தமிழக கால்பந்து விளையாட்டு வீரர் டி. தாஸ் என்ற புண்ணியகோட்டி, 54, கூறியதாவது: விம்கோ நகர் விளையாட்டு திடல் இருந்த போது, நுாற்றுக்கும் மேற்பட்டோர் கால்பந்து பயிற்சி மேற்கொண்டனர். அதன் மூலம் பலரும், மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வெற்றி வாகை சூடினர்.குறிப்பாக, 90களில், கால்பந்து வீரர்கள் அதிகளவில் இருந்தனர். பின்நாளில், விம்கோ நகர் விளையாட்டு திடல், ஐ.டி.சி., நிறுவனம் வாங்கி விட்டது. அதை தொடர்ந்து, மெட்ரோ ரயில் பணிகளுக்கு ஒப்படைக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக, கால்பந்து விளையாட்டு திடலை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வேறு வழியின்றி, கடற்கரைகள், வேறு பகுதிகளில் இருக்கும் காலி மைதானங்களில் பயிற்சி மேற்கொள்ள வேண்டிஉள்ளது.அங்கும், முறையான வசதிகள் கிடையாது. இன்றைய தலைமுறையினர், பல்வேறு வழிகளில் தடம் மாறி செல்கின்றனர். அவர்களை நெறிப்படுத்த, இங்கு ஒருங்கிணைந்த விளையாட்டு திடல் அமைக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார்.குத்துசண்டை பயிற்சியாளர் சதீஷ், 38 கூறியதாவது: திருவொற்றியூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு திடல் இல்லை. இதனால், முறையான பயிற்சிகளும் மேற்கொள்ள முடியவில்லை. போட்டிகளில் பங்கேற்கவும், வெற்றி பெற பயிற்சி பெற முடியாத சூழலும் உள்ளது.தனியார் பயிற்சி மையங்களில் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. நடைபயிற்சி, ஓட்டப்பந்தய பயிற்சி மேற்கொள்ள கூட மைதானம் இல்லாததால், எண்ணுார் விரைவு சாலையில், ஆபத்தான நிலையில், பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.இப்பகுதியை சேர்ந்த சிறுவர் - சிறுமியர், இளைஞர்களிடம் ஆர்வம் இருப்பதால் அடிப்படை பயிற்சிகள் வழங்கினாலே, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் திறமை உள்ளது. ஆனால், தென்சென்னையில் இருப்பது போல், உள்விளையாட்டு அரங்கம் வடசென்னையில் இல்லை.ஒரு காலத்தில், பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய விம்கோ நகர் மைதானம், தற்போது மெட்ரோ ரயில் வசம் உள்ளது. பள்ளிகளில் கொடுக்கும் பயிற்சிகள், வீரர்களுக்கு போதுமானதாகவும் இல்லை.விளையாட்டு மைதானம் இல்லாததால், திருவொற்றியூர் பல சாதனையாளர்களை இழந்து வருகிறது. ஒருங்கிணைந்த, விளையாட்டு திடல் அமைக்கும் பட்சத்தில், எதிர்கால சமுதாயத்தை பயனுள்ளதாக கட்டமைக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையில், திருவொற்றியூர், ஜெய்கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகேயுள்ள, ரீட் கூட்டுறவிற்கு சொந்தமான, 3 ஏக்கர் பரப்பளவில், ஒருங்கிணைந்த விளையாட்டு திடல் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.