சென்னையில் நாணய கண்காட்சி துவக்கம்
சென்னை, சென்னை நாணயவியல் அமைப்பு சார்பில், தேசிய அளவிலான மூன்று நாள் நாணய கண்காட்சி, எழும்பூர் தனியார் மண்டபத்தில் நேற்று துவங்கியது. கண்காட்சியில், இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் கலை, இலக்கிய, பண்பாட்டை வெளிப்படும் வகையிலான நாணயங்கள், 70 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. வெளிநாட்டு நாணயங்கள், சேர, சோழ, பாண்டியர், பல்லவர் கால நாணயங்கள், பிரிட்டிஷ் கால நாணயங்கள், இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட நாணயங்கள் என, பல நாட்டு நாணயங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அதேபோல், பல்வேறு நாடுகளால் வெளியிட்டப்பட்ட, 'ஸ்டாம்ப்' மற்றும் பழங்கால வீட்டு உபபோக பொருட்கள், கலை - அலங்காரப் பொருட்கள், வாள், செம்பு, அலுமினியம், தாமிரத்தால் செய்யப்பட்ட சிலைகள், பொம்மைகள், மரப்பா பொம்மைகள், கோபுரங்கள், பிரிட்டிஷ் கால பால் புட்டிகள், புகைப்பட கருவிகள் உட்பட பல்வேறு பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சி நாளை மறுநாள் வரை நடக்கும்; கண்காட்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். கண்காட்சியில் பங்கேற்றவர்கள் கூறியதாவது: நாணயங்களில், காளை, சக்கரம், மூவேந்தவர்களின் சின்னம், கடவுள் உருவங்கள் இடம் பெற்றிருப்பது வியப்பாக உள்ளது. அதேபோல், ஒரு நாண, இரண்டணா, பைச்சால்கள் என, பழங்கால நாணங்களும், பழைய 5,10 ரூபாய் நோட்டுகளும் உள்ளன. இலங்கை, மலேஷியா, அமெரிக்கா என, பல நாடுகளின் அரிய ஸ்டாம்ப்களையும் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். ***