உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடியில் டூவீலர் பார்க்கிங் மூடல் கலெக்டர் பதில் அளிக்க நோட்டீஸ்

ஆவடியில் டூவீலர் பார்க்கிங் மூடல் கலெக்டர் பதில் அளிக்க நோட்டீஸ்

சென்னை, முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட ஆவடி ரயில் நிலைய இரு சக்கர வாகன நிறுத்தத்தை மீண்டும் திறக்க கோரிய மனுவுக்கு பதில் கோரி, திருவள்ளூர் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவடி கோவில் பதாகையை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.செல்வம் தாக்கல் செய்த மனு: ஆவடி ரயில் நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகன நிறுத்தத்தை, 30 ஆண்டுகளாக, தமிழக சிறப்பு காவல் படை நிர்வகித்து வந்தது. தினமும் 2,000 பேருக்கு மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர். நான் 18 ஆண்டுகளாக மாதாந்திர பாஸ் பெற்று, வாகன நிறுத்தத்தை பயன்படுத்தி வந்தேன். இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்புமின்றி, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, வாகன நிறுத்தத்தை கடந்த 19ம் தேதி, திருவள்ளூர் ஆர்.டி.ஓ., மூடிவிட்டார். இதனால், வாகன நிறுத்தத்தை தினமும் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் போலீசார் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகாரிகளின் இந்த செயல் இயற்கை நீதிக்கு எதிரானது. ஆவடியில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கானோர், இந்த வாகன நிறுத்தத்தை மட்டுமே நம்பியுள்ளனர். எனவே, மூடப்பட்ட இரு சக்கர வாகன நிறுத்தத்தை திரும்பவும் திறக்க, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜெ.பிரதீப் ஆஜராகி, ''ஆவடி பகுதியில் மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதி என்பதால், வாகன நிறுத்தத்தை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும்,'' என்றார். இதையடுத்து, இந்த மனுவுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை செப்., 2க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !