உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் கலெக்டர் எச்சரிக்கை

இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் கலெக்டர் எச்சரிக்கை

சென்னை: 'பெண்கள் மட்டுமே இயக்க வேண்டிய இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும்' என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பெண்களால், பெண்களுக்காக இயக்கப்படும், 'இளஞ்சிவப்பு ஆட்டோ' திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் சென்னையில், 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு, சி.என்.ஜி., எனும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய ஆட்டோக்கள் வழங்கப்பட்டு உள்ளன. பெண் ஓட்டுநர்களை வைத்து ஆட்டோக்களை இயக்குவது, திட்டத்தின் பிரதான நோக்கம். ஆனால், பல நேரங்களில் ஆண்களே இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஓட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நம் நாளிதழில், ஏற்கனவே செய்தி வெளியானது. சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கை: இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கி வருவதாக வந்த புகாரையடுத்து, சமூக நலத்துறை அதிகாரிகள், சில நாள்களாக ஆய்வு மேற்கொண்டனர். அதில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, ஆண்கள் ஓட்டி வருவது கண்டறியப்பட்டது. விதிகளை மீறி இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால், ஆர்.டி.ஓ., மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என, சமூக நலத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர். ஆனால், தொடர்ந்து இளஞ்சிவப்பு ஆட்டோக்களை, ஆண்கள் இயக்கி வருவது தெரியவந்துள்ளது. இதன்பின், இளஞ்சிவப்பு ஆட்டோக்களை ஆண்கள் இயக்கினால், ஆட்டோக்கள் பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி