பயன்பாடு இன்றி கிடந்த கிணற்றை துார்வாரி தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு கண்ட கமிஷனர்
சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், பயன்பாடின்றி கிடந்த பழமையான கிணற்றை துார்வாரியதன் மூலம், காவலர் குடியிருப்பு மக்களின் தண்ணீர் பிரச்னைக்கு, போலீஸ் கமிஷனர் அருண் தீர்வு கண்டுள்ளார். எழும்பூர், புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் குடியிருப்பில், 957 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து கிடைக்கும் நீர் போதுமானதாக இல்லை. இதனால் குடியிருப்பு மக்கள், தினமும் 12,000 லிட்டர் கொள்ளளவு உடைய 15 லாரிகளில் தண்ணீர் வாங்கி, கீழ்நிலை தொட்டிகளில் நிரப்பி பயன்படுத்தி வருகின்றனர். சில நாட்களாக, குடிநீர் லாரி குறித்த நேரத்திற்கு வராததால், தண்ணீர் கிடைக்காமல், குடியிருப்பு மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதையறிந்த சென்னை போலீஸ் கமிஷனர் அருண், குடியிருப்பு வளாகத்தில் துார்ந்து கிடந்த கிணற்றை துார்வார உத்தரவிட்டார். அதன்படி, கிணற்றை துார்வாரும் பணி ஏப்., 15ல் துவங்கியது. கிணற்று நீர் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததா என்பதை கண்டறிய, தண்ணீர் மாதிரி எடுத்து, 'கிங்' ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. சோதனை செய்த ஆய்வகம், பயன்படுத்துவதற்கு உகந்த நீர் தான் என சான்று அளித்தது. இதையடுத்து, கிணறு முழுதும் துார் வாரப்பட்டது. தற்போது, மோட்டார் வாயிலாக உறிஞ்சப்படும் தண்ணீர், குழாய் மூலம் லாரிகளில் நிரப்பி, பின் காவலர் குடியிருப்பில் உள்ள கீழ்நிலை தொட்டிகளில் நிரப்பி, பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புது ப்பேட்டை காவலர் குடியிருப்பில், 1982ல், அப்போதைய ஜனாதிபதி கியானி ஜைல்சிங் துவக்கிய கிணறு வெட்டும் பணி முடிந்து, 1984ல் பயன்பாட்டுக்கு வந்தது. நாளடைவில், பயன்பாடு இன்றி கிணறு மூடப்பட்டது. இந்நிலையில், கமிஷனர் அருண் கிணற்றை துார்வாரி சீரமைத்துள்ளார். கிணறு, 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடையது. தற்போது, 1.5 லட்சம் லிட்டர் ஊற்று நீர் இருப்பு உள்ளது. கிணற்று நீர் கைக்கொடுப்பதால், தினம் 15 லாரிகளில் வாங்கிய தண்ணீர், தற்போது பாதியாக குறைந்து உள்ளது. கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், காவலர் குடியிருப்பில் உள்ள அனைத்து கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் செல்லும் வகையில், விரைவில் குழாய் பதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.